பெரும் பணம் ஒரு சிறை

Author: Nagaraji.B /

ஆடம்பரமும், படோடோபமும் வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒருவகை ஹிம்சை (violence)!' என்றார் மகாத்மா காந்தி. உண்மையில், பலரால் தங்களிடம் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுள்ள ஆடம்பரத்தை, அது ஒரு ஹிம்சை என்று உணரமுடிவதே இல்லை. மாறாக, அதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரம் ஒரு சிறை!

ஒருமுறை நண்பர் ஒருவரை சந்தித்தபோது, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தங்கக் காசு மாலையை அவர் திருப்பதி கோயிலுக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார். ஆகவே அங்கு அவருக்கு பிரத்தியேக சலுகை என்றும் கூறினார். நான் அங்கு செல்லவேண்டி இருந்தால், அவரிடம் தெரிவித்தால், செளகர்யமாகப் போய் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.

எங்கோ சம்பாதித்த பணம், ஏதோ ஒருவிதத்தில் கோயிலுக்கு போய்ச் சேர்வதில் எனக்கு உடன்பாடுதான். அந்தப் பணம் பிறகு அன்னதானமாகவோ, வேறு பல நலத்திட்டங்களுக்கோ பயன்படுகிறதே என்பதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் அதைப் பற்றிய அவரின் தம்பட்டம் இந்த அளவுக்குத் தேவையில்லையே என்று தோன்றியது.

வேளுக்குடி கிருஷ்ணன் தன்னுடைய உபந்யாசத்தில் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்துவார்.

'பெருமாளை மட்டும் தரிசிக்கவேண்டும் என்றால், நம் வீட்டிலுள்ள பூஜை அறையிலேயே தரிசித்துக்கொள்ளலாம். திருப்பதிக்கு செல்லும் நோக்கமே, வரிசையில் நின்று செல்லும்போது வைணவர்கள் ஒருவருடன் ஒருவர் இடித்துக்கொண்டு, அதனால் ஏற்படும் தெய்விகத்தன்மையின் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகத்தான்!' என்று சொல்வார்.

காசு கொடுப்பவர்களுக்கும், காசு மாலை கொடுப்பவர்களுக்கும் தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுமானால் சலுகை காட்டலாம். ஆனால், பெருமாள் காட்டமாட்டார். கோடி ரூபாய் கார், பல லட்சம் ரூபாய வாட்ச், செல்போன் என்று உபயோகிப்பது இப்போதைய நாகரிகமாகிவிட்டது. முடியாதவர்களின் பொறாமையைக் கண்டு பெருமைப்படுவது, முடிந்தவர்களின் ஒரு கொடூர சந்தோஷமாகி விட்டது. தற்போதைய பொருளாதாரச் சரிவு இந்த மதம் பிடித்த யானைகளுக்கு சரியான அங்குசம் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருசமயம், ஏசு கிறிஸ்து ஒரு ஊருக்குச் சென்றபோது, அந்த ஊரிலுள்ள பெரும் பணக்காரர்களெல்லாம் முத்து, பவளம் மற்றும் தங்கத்தினாலான ஆபரணங்களைக் கொண்டுவந்து அவருக்கு காணிக்கையாகச் செலுத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்த ஒரு மூதாட்டி தன் துணியில் முடித்து வைத்திருந்த சிறிய ஒற்றை வெள்ளிக் காசை எடுத்து ஏசுநாதரிடம் கொடுத்தாள். கூட்டம் ஏளனமாக சிரித்தது.

சிரித்தவர்களைப் பார்த்து ஏசுநாதர் சொன்னார்: ''நீங்கள் அனைவரும் உங்களிடமுள்ள பெரும் செல்வததின் ஒரு பகுதியை மட்டும் எனக்குக் கொடுத்தீர்கள். ஆனால், இந்த மூதாட்டி தன்னிடமிருந்த மொத்த செல்வத்தையும் எனக்கு கொடுத்து விட்டாள். ஆகவே, என் நினைவில் இவர்தான் உயர்ந்து நிற்கிறார்!'

பல ஊர்களுக்கு நடந்தும், கழுதை மேல் ஏறியும் சென்ற அந்த ஏழை மரத்தச்சன் மகனின் எளிய பல அறிவுரைகளை இன்று ஆடம்பர கார்களில் போய், நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, ஏசி அறைகளில் போதிக்கிறார்கள்!

பெரும் செல்வமும் அதனால் ஏற்படும் கர்வமும் உங்களை இறைவனையும், மகிழ்ச்சியையும் அண்டவிடாமல் சிறைப்பிடித்து வைத்திரும். இருப்பதை இல்லாவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் சிறைக்கதவு தானே திறக்கும்!

வேங்கடம் எழுதிய 'இனி எல்லாம் சுகமே...' நூலிலிருந்து....

புத்தகம்:விகடன் பிரசுரம்


0 comments:

Post a Comment

Pages