விவேகானந்தரின் விவேக மொழிகள்

Author: Nagaraji.B /


விவேகானந்தரின் விவேக மொழிகள்
  • மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.
  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
  • யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
  • துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
  • ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
  • அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.
  • எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
  • மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
  • நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.
  • மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.
  • பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
  • கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

முட்டாள் என்பது நல்ல பெயரா?

Author: Nagaraji.B /

புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் "முட்டாள்". அதனால் அவனை மற்ற மாணவர்கள் "முட்டாளே இங்கே வா! முட்டாளே இதைச் செய்!" என்று கேலி செய்தனர்.

தன் பெயரே தன்னைக் கேலிக்கு உள்ளாக்குகிறதே" என்று வருந்தினான்.

ஆசிரியரை வணங்கிய அவன், "ஐயா, எனக்கு ஒரு நல்ல பெயராக நீங்கள் வைக்க வேண்டும். எல்லோரும் மதிக்கும் பெயராக அது இருக்க வேண்டும்." என்று வேண்டினான்.

"நீ இங்கிருந்து புறப்பட்டு பல ஊர்களுக்கும் சென்று வா. எந்தப் பெயர் உனக்குப் பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து வந்து சொல். அந்தப் பெயரையே உனக்கு வைத்து விடுகிறேன்" என்றார் அவர்.

அங்கிருந்து புறப்பட்ட அவனும் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான்.

வழியில் சிலர் சுடுகாட்டிற்குப் பிணம் ஒன்றைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இறந்தவனைப் பற்றி விசாரித்தான் முட்டாள். இறந்தவன் பெயர் தேவன் என்று தெரிந்து கொண்டான்.

"தேவன் எப்படிச் சாவான்?"என்று கேட்டான் அவன்.

"தேவன் என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். சாவு என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். பெயரில் என்ன உள்ளது? ஒருவனை அடையாளம் காட்டுவதுதான் பெயர். இது தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று எரிச்சலுடன் பதில் சொன்னான் ஒருவன்.

இன்னொரு ஊரை அடைந்தான் அவன். ஒரு வீட்டின் முன் நின்று,"அம்மா, தாகமாக உள்ளது குடிக்கத் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான்.

"தண்ணீரெல்லாம் தர முடியாது... இங்கிருந்து போ..." என்று விரட்டினாள் அந்த வீட்டிலிருந்தவள்.

அவளைப் பற்றி விசாரித்தான். அவள் பெயர் காவேரி என்று தெரிந்து கொண்டான்.

அங்கிருந்து சென்ற அவன் நான்கு சாலை சந்திப்பை அடைந்தான். எதிரி வந்த ஒருவரிடம்,"அய்யா, பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு எப்படி செல்வது/" என்று விசாரித்தான்.

அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.

உங்கள் பெயர் என்ன? என்றான்

அவர் "வழிகாட்டி" என்றார்.

இன்னொரு இடத்தில் ஒரு பெண்ணை அவள் தாய் அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

"ஏனம்மா அந்தச் சிறுமியை அடிக்கிறீர்கள்?'

"வேலைக்குச் சென்ற அவள் வேலை எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளாள். இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? அதனால்தான் அடிக்கிறேன்."என்றாள் அவள்.

"உங்களின் மகளின் பெயர் என்ன" என்று கேட்டான்.

"திருமகள்" என்றாள் அவள்.

ஊர் திரும்பிய அவன் தன் ஆசிரியரை வணங்கினான்.

"என்ன பெயரித் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஆசிரியர்.

"தேவன் என்ற பெயருடையவனால் சாவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தாகத்திற்கு தண்னீர் தர மறுப்பவளின் பெயர் காவேரி. வழிகாட்ட முடியாதவனின் பெயர் வழிகாட்டி. வறுமையில் வாடுபவளின் பெயர் திருமகள். பெயர் ஒருவரை அடையாளம் காட்டும் குறியீடுதான். மற்ற பெயர்களுக்கு முட்டாள் என்கிற என்னுடைய பெயரே நன்றாக இருக்கிறது" என்றான் அவன்.

எல்லோருக்கும் பெயருக்கு ஏற்றபடியா செயல்பாடுகள் இருக்கிறது?

Pages