இருட்டுக்கடை ரகசியம்!

Author: Nagaraji.B /

இருட்டுக்கடை ரகசியம்!

நெல்லையப்பர் கோயில் எதிரே அந்தி வெயில் சாய்ந்து சுள்ளென முதுகில் படர்கிறது. ஆண்களும், பெண்களுக்குமாய்ப் பூட்டியிருக்கும் கடை முன்பக்க வரிசை கட்டி நிற்கிறார்கள். இது என்ன ரேஷன் கடையா? கேட்டால், இதாம்ல, இருட்டுக் கடை அல்வா; உலக பேமஸ்ல என்கிறார் ஒருவர்.
வருஷம் இருக்கும், இந்தக் கடை ஆரம்பித்து! கிருஷ்ணசிங் இதனோட நிறுவனர். அவரது மகன் பீஜிலிசிங். இந்த இரண்டு பேரோட காலத்துக்குப் பிறகு, தற்போது நிர்வாகத்தை நடத்தி வருபவர் ஹரிசிங். பூர்வீகத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்துலேர்ந்து வந்தவர்கள் நெல்லையிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.
அந்தக் காலத்துல ஒரு அரிக்கேன் விளக்கை மட்டும் எரிய விட்டு இந்தக் கடையை நடத்தி வந்தார் என் அப்பா. அப்ப எல்லாம் சாயந்திரம் ஆறு மணியிலேர்ந்து ராத்தி பத்து மணி வரைக்கும்தான் கடை திறந்திருக்கும். துவக்க காலங்கள்ல நெல்லை மக்கள், அந்திக்கடைனு தான் சொல்லி வந்தாங்க. அதுக்கு கொஞ்ச வருஷம் கழித்து ஜனங்க என்ன நெனைச்சாங்களோ தெரியலை. இருட்டு நேரத்தில் மட்டும் திறந்து யாவாரம் நடக்குறதால பொதுமக்களே இருட்டுக்கடைனு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. உலகத்திலேயே வாடிக்கையாளர்களா பேர் வெச்சது எங்க கடைக்கு மட்டும்தான்! எனப் பெருமிதம் கொள்கிறார் ஹரிசிங்.
கடை வாசலில் பெயர் பலகையோ, அதன் முகப்பில் மின்விளக்கோ கூட கிடையாது. சிறிய கடையின் உள்ளே அறுபது வால்ட் குண்டு பல்பு மட்டுமே. மின்சாரம் இருந்தும், அதுவும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏராளம் வந்தும் அநியாயத்துக்கு ஏனிப்படி அடம்பிக்கிறீர்கள்? என்றால்,
''இருட்டுக்கடை அல்வா சூப்பர்னு ஒரு நிரந்தர டிரேட்மார்க் எங்க மேல விழுந்திடுச்சு. அதை நாங்க ஏன் மாத்தணும்? கடைக்கு மின்சாரம் சப்ளை வந்த பிறகும், ஒரே ஒரு குண்டு பல்புதான் மாட்டினாங்க என் அப்பா. அது ப்யூஸ் போனா, புதுசா ஒரு குண்டு பல்பு போட்டுடுவோம். அவ்வளவுதான். அதை இன்னியவரைக்கும் கடைபிடிச்சு வர்றோம். மத்தபடி எங்க கவனம் முழுவதுமே நாங்க தயாரிக்கிற அல்வாவின் குவாலிட்டிய மெய்ன்ட்டெய்ன் பண்ணிட்டு வர்றதுலதான் இருக்கும்'' என்கிறார் ஹரிசிங்.


ஆத்துத் தண்ணி, அரைக்கிற பக்குவம்!

''எந்தவிதமான எந்திரமும் இல்லாமல் கல் உரலில் ÷ பாட்டுத்தான் கோதுமையை அரைக்கிறோம். சுத்தமான சம்பா கோதுமை, நெய், சர்க்கரை, தாமிரபரணி தண்ணீர். இவை நான்கும் ரொம்ப முக்கியம். முந்திரிப்பருப்பு, அது... இது... என எக்ஸ்ட்ராவாக எந்தப் பொருளையும் சேர்ப்பதில்லை. நிறம் வேண்டும் என்பதற்காக கலர் பவுடர் எதையும் போடுவதில்லை. சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்கணும். மறுநாள் உரல்ல போட்டு நல்லா அரைக்கணும். அரைக்க அரைக்க கோதுமை பாலாக மாறி வரும். இந்தப் பாலை வடிகட்டி எடுத்து பெரிய இரும்புச்சடியில் ஊற்றி நன்கு கொதிக்க கொதிக்க கிளறணும். அந்தப் பால் இலேசாகச் சூடானதும் சர்க்கரை போட்டுக் கிண்டனும். கிளறுவதை விட்டுவிடக்கூடாது. பாலும் சர்க்கரையும் இறுகிக் கெட்டியான பதத்துக்கு வரும்போது நெய்விட்டுக் கிறளணும். அல்வா குங்கும நிறத்தில் உருவாக ஒரு இறுகலான பதத்துக்கு வந்ததும், இறக்கி ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைத்து ஆறியபின் எடுத்துச் சாப்பிட்டால், அதாங்க இருட்டுக் கடை அல்வா!''


0 comments:

Post a Comment

Pages