மண்பாண்ட கிராமம்!

Author: Nagaraji.B /

மண்பாண்ட கிராமம்!

""பொங்கல் (தை) மாசம்னு இல்ல. வருஷத்துல எல்லா மாசத்துலயும் எங்க ஊர்ல மண்பாண்ட ஏவாரம், எறக்கம் இல்லாம நடந்துக்கிட்டே இருக்கும். ஊரு மொசுப்புல ரெண்டு மூளையில பானைகளைச் சுட்டு எடுத்துக்கிட்டே இருப்போம். இங்கிருந்துதான் சேலம், தர்மபுரி, ஈரோடு,. கோவை மாவட்டப் பகுதிகளுக்கு மண்பாண்டங்கள் போகுது. அதனால எங்க ஊரு சனங்களுக்கு வருஷம் முச்சுடும் வேலை வெட்டி கெடைக்குது!'' எனக்கூறி அதிர வைக்கிறார் வாழப்பாடி அருகேயுள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தின் மண்பாண்ட உற்பத்தியாளர் ஒருவர்.



ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும், மண்பானைகள் அணிவகுத்தாற்போல தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் நூறு குடும்பங்களில் முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு, உள்ளூரிலேயே வேலை தந்து வருகிறது மண்பாண்டத் தொழில்.




"கிராமங்கள்ல இந்தத் தொழில் இப்ப ரொம்பவே கொறைஞ்சி போச்சுன்னு சொல்றாங்க. இந்த ஊர்ல மட்டும்தான் எங்காளுங்க நெறைய குடும்பங்க ஒரே எடத்துல வாழ்ந்துக்கிட்டு இந்தத் தொழிலைச் செஞ்சுட்டு வர்றோம்னு நெனைக்கிறேன்! என்கிறார் வெங்கடாசலம்.




அது சரி, கிராமத்து சனங்க எல்லாரும் இந்த வேலை செய்யறதுக்கு இவங்களுக்கு எங்கேருந்து மண்ணு கெடைக்குது? ""ஊர்ல பெரிய ஏரின்னு ஒண்ணு, அதுல கெடைக்குது வண்டல் மண்ணு. ரொம்ப அற்புதமான மண்ணு. பானை வகையறதுக்குனு தோதான மண், காலங் காலமாக வெட்டிக்கிட்டே இருக்கோம். மழைக்காலத்துல ஏரிக்குள்ளார மண்ணுவந்து சேரும். ஒரு பக்கம் வெட்டுவோம். இன்னொரு பக்கம் மண்ணு வந்து சேர்ந்துடும். மாத்தி மாத்தி வெட்டுவோம். இந்தக் களிமண்ணோட கை வாகு வேற எந்த ஊர் மண்ணுலயும் கெடைக்காதுங்க! என்று "மண்'ணின் மாண்பு பற்றிப் பேசுகின்றனர் ஊர்க்காரர்கள்.





""எங்க ஊர பொங்கல் பானையும், பொண்ணுவூட்டு சீர் பானையும், அரசாணிப் பானையும் ரொம்ப ஃபேமசு. அதுகளப் பார்க்கவே அத்தினி அழகா இருக்கும். பானையைச் சுத்திலும் கலர் கலரா கோடு வரைஞ்சு, கட்டம் போட்டு கண்ணைப் பறிக்கறாப் போல தயார் பண்ணுவோம். பொங்கல் பானையில சுத்தியும் கோலம் வரைஞ்சிருப்போம். புதுசா கண்ணாலம் ஆகிப் போனவங்களுக்கு பொண்ணு வூட்லேர்ந்து சீர் தருவாங்களே. அதுக்குனு பெரிய பானைல டிசைன் வரைஞ்சி வெச்சிருப்போம். கண்ணாலத்துக்கு “ரசாணிப்பானைகளும் கலை நேர்த்தியா கலர் கலரா அதுக மேல படம் வரைஞ்சிருப்போம். கண்ணாலம் பொங்கல், பொங்கல் சிருன்னு எங்க ஊருபானைக்கு ஏக கிராக்கி! எனக் கூறுகிறார் மல்லிகா.





எங்க ஊர் ஏரி வண்டல் மண்ணை ஈரக்கட்டியா வெட்டி எடுப்போம். காயவைத்து உரல் குந்தானியில இடிச்சுப் பவுடராக்குவோம். அதைக் கரைச்சு தரையில் ஊத்திப் பேத்து எடுப்போம். அதுதான் பானை வனையறதுக்குத் தோதான களிமண். பானை வனைஞ்சு வெயில்ல கொஞ்சம் காயவெச்சு அப்புறம் சூளைக்கு அனுப்பிடுவோம். ஒரு சூளையில் இருநூறு முன்னூறு பானை வெச்சு சூளை போவோம். சட்டி நல்லா வேக ரெண்டு மணி நேரம் ஆகும். குடிநீர்ப் பானை, பொங்கல் பானை, சீர் அரசாணப் பானை, குழம்பு சட்டி இதெல்லாம் நாங்க தயாரிக்கிறது முக்கியமான சமாச்சாரம் . எங்க வீட்ல இப்பவும் மண் பானைச் சோறு, மண் சட்டிக் குழம்புதான். இதனோட ருசி வேற எதுலயும் வராது!'' என மண்பாண்டங்கள் மீது சத்தியமாக உறுதியாய்க் கூறுகிறார் பெரிய கிருஷ்ணாபுரம் மண்பாண்ட உற்பத்தியாளர் வெங்கடாசலம்.

0 comments:

Post a Comment

Pages