மஞ்சரி : மருந்துகளே இல்லாமல் வாழலாம் நீண்டகாலம்....!

Author: Nagaraji.B /

மருந்துகளே இல்லாமல் வாழலாம் நீண்டகாலம்....!
மார்ச் 22,2010,15:32 IST

- பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்
மருந்துகளே இல்லாமல் நீடூழி வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் சாதித்திருக்கின்றனர். இன்றைய விஞ்ஞான, ஆடம்பர, பரபரப்பான வாழ்வுச் சூழலில் முடியாது என்று பலரும் கருதுகின்றனர். ஆனாலும் அதற்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இல்லை. அப்படியானால், அதற்கு முயற்சிப் பதில் தவறில்லையே.
முடியும் என்ற ஆசை, நம்பிக்கையோடு இக்கட்டுரையின்படி முயன்று பாருங்களேன்.
தினமணி கதிரில் வெளிவந்த இக்கட்டுரையை அனுப்பியவர் வில்லிசைவேந்தர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
தயை எல்லோரிடத்திலும் நட்பு, ஈகை, இனிமையான பேச்சு இவற்றிற்கு ஈடாக, பிறர் மனத்தைக் கவரும் உபாயம் வேறு ஒன்றுமில்லை. இதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நோயற்ற வாழ்விற்கான ஒரு வழியாகும்.
பிறர் சொத்தைக் கபடமாக அபகரிக்க எண்ணாதிருத்தல், எல்லாரிடமும் நல்லெண்ணம் கொண்டிருத்தல், தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலனுண்டு என நினைத்தல் இம்மூன்றும் மனதøத் தூய்மையாக்கும் பழக்கங்கள். நோயற்ற வாழ்விற்கு இதுவும் வழி வகுக்கும்.
உடலுக்கும் மனதிற்கும் நன்மைதரும் உணவையம் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், முன்னதாக நிதானித்துச் செயலாற்றுபவன், பொறிகளால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன்,
பிறருக்கு உதவுபவன், எல்லா நிலைகளையும் சமமான பாவனையுடன் பார்ப்பவன், உண்மையில் ஈடுபாடுள்ளவன், பொறுமை உள்ளவன், உண்மையான இதம் தரும் விஷயங்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயுற்றிருபபான்.
முறையற்ற மனம் போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதுவும், புளிப்பு, உப்பு, உறைப்பு அதிகமாகச் சேர்ப்பதுவும்.
அப்பளக்காரம் சோடா உப்பு போன்றவை அதிகம் சேர்ப்பதுவும், குளிரால் விறைத்தும் உலர்ந்தும் சுவையற்றிருக்கும் கறிகாய்களும் புலாலும் சேர்ப்பதுவும்.
எள்ளும் எண்ணெய்யும், இட்லி, தோசை போன்ற மாவாலான பணியாரங்களும் உணவில் அதிக அளவில் தொடர்ந்து சேர்ப்பதும், உடல் நலனைக் கெடுக்கும் எல்லா நோய்களையும் தோற்றுவிக்கும் என்பதை ஒருவர் உணர்ந்து அவற்றை கருத்துடன் தவிர்த்தும் குறைத்தும் உபயோகித்தால், மருந்தில்லாமல் நோயற்ற வாழ்வு வாழ்ந்திடலாம்.
இயற்கையின் செயல்முறையில் உள்ளத்தில் பல உணர்ச்சிகள் எழக்கூடும். அவற்றை அடக்காமல் அவற்றிற்குப் போக்கிடம் தருவது அவசியம். ஆனால் பிறருடைய பொருளை அடையத் தகாதமுறையில் விரும்பும் ஆர்வம் அடைந்துள்ளதை இழப்பதால் ஏற்படும் சோகம்.
கேடு விளைவிப்பார்களோ என்ற பயம் தன் உடல் பற்றி எரியுமளவிற்கு எழும் கடும் சினம்.
தன்னிடமில்லாத நற்குணங்களை தன்னிடம் இருப்பதாக மதித்து நிமிர்வது, மறைக்கத்தக்க தனது பிழைகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் திமிர், பலருக்கும் பொதுவான பொருளில் தன்னைத் தவிர பிறர் பங்கு கொள்வதைச் சகிக்க முடியாமை.
தக்கதையும் அதிக அளவில் விரும்புதல், பிறருக்குத் தீங்கு நினைப்பதில் திருப்தி ஆகிய இவையும் உணர்ச்சிகள்தான்.
எனினும் இவற்றை அடக்க வேண்டும். போக்கிடம் காட்டி வெளிப்பட இடம் தரக்கூடாது. இவற்றைப் பின்பற்றினால் மருந்துகள் தேவை என்ற நிலையைத் தவிர்க்கலாம்.
உடலையும் மனதையும் பாதிக்க வல்லவை என அறிந்தே அதில் ஈடுபடுதலாகிய அறிவுத் தடுமாற்றமின்றிப் பொறிகளை அடக்கி, நல்ல நினைவுடன் தேசத்திற்கும், காலத்திற்கும் தன் உடல் நிலைக்கும் ஏற்றவற்றை உணர்ந்து நன்னடத்தையைத் தொடர்ந்து கையாள்வதொன்றே நோய்வராமல் பாதுகாக்க உதவக்கூடியது.
தொடர்ந்து ஈரமுள்ள நெஞ்சுடன் இருத்தல், தனக்கெனப் பொருள் கொள்ளாமை, உடல் பேச்சு மனம் இவற்றின் அடக்கம், பிறர் நலனில் தன்னலம் என்ற எண்ணத்துடன் செயல்படுதல் இவையே போதுமானவை. விரதமாகத் தொடர்ந்து கடைபிடிக்க நினைத்த வாழ்வைத் தரவல்லவை.
நன்மை எது என்பதனைக் கருத்துடன் விசாரித்துத் தேர்ந்து எடுப்பவனுக்குக் கல்வி, அறிவு, ஞாபகசக்தி, செயல்திறன், மனோதிடம், நன்மை பயப்பதையே நாடும் சீரிய மனப்பாங்கு, சொல்தூய்மை, மனவடக்கம், தைரியம் இவை எப்போதும் நின்று கை கொடுக்கும். மனதிற்குப் பிடித்ததை நாடுபவனுக்கு இவை துணை நிற்கமாட்டா.
உண்மை பேசு, கோபப்படாதே, லாகிரி மதுபானங்களைத் தவிர்த்து விடு, பிறருக்குத் தீங்கு நினையாதே. சொல்லாதே, செய்யாதே, உடலை அளவுக்கு மீறி வருத்தாதே. அமைதி கொள். பிரியமாகப் பேசு, இறைவனை அமைதியுடன் வழிபடு. உடல் தூய்மை, உள்ளத்தூய்மை இரண்டும் மேலானவை. அவற்றைக் கடைப்பிடி, புத்தியை நல்வழியில் தூண்டிச் செயலாற்று. இருப்பதைப் பகிர்ந்து கொள், கொடுப்பதை மனமுவந்து கொடு, வாழ்வு நன்கு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் நிலைத்திரு.
பொல்லாங்குக்கு ஆட்படாதே. உயிருள்ளவற்றுடன் பரிவுடன் பழகு, தூக்கத்தையும் விழிப்பையும் சீராக அமைத்துக் கொள். உணவில் நெய், பால், அதிகம் சேர்த்துக் கொள். தேசத்தையும் காலத்தையம் ஒட்டி நடந்துகொள்.
பகுத்தறிவைப் பயன்படுத்து, அகந்தை கொள்ளாதே, நல்லோர்கள் செல்லும் பாதையில் செல், கலப்பட உணவை ஏற்காதே, உன் உள்ளே உள்ள ஆத்மாவின் வசப்படு, நெறிமுறை தவறாதே, இவை தினமும் கையாளத்தக்க சிறந்த முறைகள் என்று சரகர் எனும் முனிவர் கூறுகிறார்.
மேற்குறிப்பிட்டவை ஆயுர்வேத நூல்களில் காணப்படும் பல அறிவுரைகளில் சில.
இவற்றை இந்தப் புத்தாண்டில் செயல்படுத்துவோம் என்று நீங்களும் உங்கள் குடும்பமும் நண்பர்களும் தீர்மானித்து நடைமுறைப்படுத்தினால் உங்களுடைய கேள்விக்கு அவையே பதிலாக அமையும்.

0 comments:

Post a Comment

Pages