கடைசித் தலைமுறை...!

Author: Nagaraji.B /


தெய்வ ஆபரணங்கள் மற்றும் பரத நாட்டிய அணிகலன்கள் செய்யும் கலையில் குமரி மாவட்டம் வடசேரி ஆபரணக் கலைஞர்கள், புகழின் உச்சியில் இருந்தனர் ஒருகாலத்தில். சாமுத்திரிகா லட்சணத்தோடு சாஸ்திர விதிமுறைப்படி செய்யும் இந்த ஆபரணக் கலைஞர்கள், தங்களின் தொழில் காலத்தின் போது உடலை உள்ளத்தைத் தூய்மையாகக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தனர். நகைகள் செய்யும்போது அப்பணி நிறைவடையும் காலம் வரை வீட்டுக்கே வரமாட்டார்கள். வேலை செய்யும் பட்டறைகளிலே தங்கி, காலை மாலை குளித்து, பூஜை செய்து, சைவ உணவு மட்டுமே உட்கொண்டு பணி முடிப்பர்.


ஊரே நகை செய்த காலம் போய், அந்த வம்சத்தில் இப்போது முந்நூறு பேர் மட்டுமே இத்தொழில் செய்கின்றனர். அவர்களுள் மூத்த கலைஞர் ராமச்சந்திரனைச் சந்தித்தபோது, ""தலை செட், மகர கண்டி மாலை, அட்டியல், ராக்கொடி, நத்து பில்லாக்கு, கைவங்கி, தோடு, பூத்தாலி, நெத்திச்சுட்டி, பிச்சிமலை, ஒட்டியாணம், சலங்கை, தோடு, மாங்காய் மாலை, காது மாட்டல்... இவையெல்லாம் என்ன தெரியுமா?'' என்று மூச்சிறைக்கக் கேட்டு, அந்த ஆபரணங்களின் பெயர்களையும் அவை எந்தெந்த உறுப்புகளை அலங்கரிப்பவை என்பதையும் விவரிக்கிறார்.


""மிகுந்த வரவேற்பும் தேவையும் இத்தொழிலுக்கு இருந்தாலும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தமுடியாதபடி இக்கலை அழிந்து, அந்தக் கடைசித் தலைமுறையோடு நின்றுவிடும்'' என்கிறார். இந்த அவசர யுகத்தில் பொறுமையின் எல்லையை நீட்டிக்கும் தொழிலைக் கற்கவோ, தொடரவோ இளைய தலைமுறைக்கு ஆர்வமில்லை. அம்மனுக்கு ஒரு கிரீடம் செய்து முடிக்க எட்டு மாதம் ஆகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இவர்கள், ஆபரணங்களுக்கான வடிவக் காப்புரிமையைப் பெற்றுள்ளனர். நடிகை பத்மினியின் அமெரிக்க நாட்டியப் பள்ளி மாணவர்களுக்கு பரதநாட்டிய ஆபரணங்கள் வாங்கிச் சென்றதை முக்கிய அனுபவமாகக் குறிப்பிடுகிறார்.


நாட்டிய ஆபரணங்களை இரும்புப் பெட்டியில் வைக்கக்கூடாது. வெள்ளைத் துணியில் துடைத்து மரப்பெட்டியில்தான் வைக்க வேண்டும்'' என டிப்ஸ் தரும் இவர்கள், இந்தப் பாரம்பரியத் தொழிலின் கடைசித் தலைமுறை என்பது கலவரப்படுத்துகிறது. மெல்லக் கலை இனி சாகுமோ? அரசு இதைக் கவனிக்குமா?

0 comments:

Post a Comment

Pages