ஏ.ஆர்.ரஹ்மான்: இசையின் ஆளுமை

Author: Nagaraji.B /

காலச்சுவடு-அம்ஷன் குமார்

1990ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் தயாரிக்கப்பட்ட விளம்பரப் படங்கள் பலவும் பொருட்களைக் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தன. விளம்பரப் பொருட்களின் பெயரைப் பலமுறை உரக்கக் கூறி அவற்றின் கல்யாண குணங்களை வானளாவப் புகழ்வதோடு அவை முடிந்துவிடும். மும்பையிலிருந்து வெளிவந்த விளம்பரப் படங்கள் அழகுணர்ச்சி கொண்டிருந்தன. அவற்றில் பேச்சு குறைவாகவும் காட்சி அம்சங்கள் அதிகமாகவும் இடம்பெற்றன. விளம்பரப் பொருட்கள் பற்றிய மேன்மைகள் அவற்றில் உயர்வு நவிற்சியின்றிச் செ?ல்லப்பட்டன. நான் அந்தப் பாணியில் படத்தை எடுத்தேன்.



படத்தை முடித்த பிறகு அதற்கு நல்ல பின்னணி இசை தர வேண்டி, சில இசையமைப்பாளர்களை அணுகினேன். விளம்பரப் படங்களுக்கு இசையமைப்பது தங்கள் மேதமைக்கு ஏற்றதன்று என முன்னணி இசையமைப்பாளர்கள் கருதினார்கள். மார்க்கெட்டை இழந்தவர்கள்கூட இது போதும் என்கிற மனே?பாவத்துடன் ஏனோதானோவென்று இசை அமைத்தனர். அச்சமயம் அசோக் நகர் சாமியார் மடத்தில் ஒரு துடிப்பான இளம் இசையமைப்பாளர் ஒருவரைச் சந்தித்தேன்.



அவர் எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் என்பது தெரிந்தவுடன் என் படத்திற்கு அவர்தான் இசையமைக்கப் போகிறார் என்று முடிவுசெய்தேன். எலக்ட்ரானிக் இசை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தார்கோவ்ஸ்கியின் படங்களில்தான் நான் முதன்முறையாக எல்க்ட்ரானிக் இசையைக் கேட்டிருந்தேன். என் படமும் இசையமைப்பாளருக்குப் பிடித்திருந்தது. அவர் என்னுடன் பணியாற்ற இசைந்தார். அவர் பெயர் திலீப்குமார் என்று சொன்னவுடனேயே அவர் சில காலம் கழித்து வேறு பெயரால் நன்கு அறியப்படலானார் என்பதை எவரும் செ?ல்லிவிடுவார்கள். ஏ.ஆர். ரஹ்மான். திரையரங்குகளில் வெளியிட ஒரு நிமிட நேரப் படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருபது நொடிப் படம் என இரண்டு விதமாக அதை எடிட் செய்திருந்தேன். படம் எடுக்கும்பொழுதே இரண்டும் தனித்தனியாக முழுமை பெற்றிருக்க வேண்டும் என்கிற உணர்வுடன் எடுத்தேன். ஒரு நிமிடப் படத்திலிருந்து அதிரடியாக இருபது வினாடிப் படமாகக் குறைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது என்கிற எண்ணம் பார்வையாளர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால், ரஹ்மான் மோகன ராகத்தின் சாயல் கொண்ட ஒரு ட்யூனை இரண்டு விதமாகப் போட்டுக் கொடுத்தார். அது அற்புதமான இசை. அதன் பிறகு நான் எடுத்த விளம்பரப் படங்களுக்கெல்லாம் ஏ. ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர். எனக்கு விளம்பரப் படங்கள் எடுப்பதில் முற்றாக ஆர்வம் குறைந்தபொழுது அவர் திரைப்படங்களில் பிரபலமான இசையமைப்பாளராகியிருந்தார்.



அரை நிமிட நேரப் படம் என்றாலும் அவர் அதற்கு இசையமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார். இரவு ஒன்பது மணிக்குத்தான் வேலையை ஆரம்பிப்பார். நானும் அருகிலேயே இருப்பேன். மதுரை சோமு கச்சேரிபோல் அது விடிய விடிய நடக்கும். ஒருமுறை அவர் கொடுத்த இசை எனக்கு அவ்வளவாகத் திருப்தி தரவில்லை. அதை அவர் புரிந்துகொண்டார். அவருக்கும் அதில் திருப்தி இல்லை. மாற்றி மாற்றி ட்யூன்களைப் போட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக இருவராலும் விரும்பப்பட்ட ஒரு ட்யூனுக்கு முழு இசை வடிவம் தரப்பட்டபொழுது விடியற்காலை ஆறு மணி. அவருடைய வீட்டுக் காம்பவுண்டுக்குள் அமைந்திருந்த அவருடைய பஞ்சதன் இன் ஒலிக்கூடத்திற்கு வெளியே மணி ரத்னமும் பாடகி மின்மினியும் காத்திருந்தார்கள். ரோஜாவில் இடம்பெற்ற பிசின்ன சின்ன ஆசை' பாடல் ஒலிப்பதிவாக இருந்தது. ரஹ்மானுக்கு ரோஜா முதல் படம். பிரபலமான இயக்குநர் வெளியே அமர்ந்திருந்தார். ஆனால் ரஹ்மான் தான் செய்துகொண்டிருந்த வேலையைப் பதற்றப்படாது முடித்துக்கொடுத்த பிறகே அவர்களை உள்ளே அழைத்தார்.



அவருடைய திரையிசையைப் பலரும் கொண்டாடுகிறார்கள். அவர் விளம்பரப் படத்தின் இசையைப் புரிந்துகொண்ட விதமும் அலாதியானது. முன்னோடிகளற்ற அத்துறையில் அவர் செய்த சாதனைகளை இதுவரை எவரும் தாண்டிச் செல்லவில்லை. ஒரு யமஹா சிந்தசைஸரை வைத்துக்கொண்டு ஒரு பெரிய ஆர்கெஸ்டிரா இசை அமைத்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்திவிடுவார். இந்த வளத்தையெல்லாம் திரையிசைக்கும் கொண்டு சென்றார். ஃப்யூஷன் இசையில் அவரது பாணி எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஃப்யூஷன் இசையை முதன்முதலில் தமிழ்த் திரைக்குக் கொண்டுவந்தவர் எல். வைத்தியநாதன். கர்நாடக மெல்லிசையுடன் மேற்கத்திய வாத்தியங்களை இணைத்த ஃப்யூஷன் அவருடையது. கிராமிய மெட்டுகளுடன் அலங்கார அடுக்குகள் மிகுந்த பரோக் இசையின் முக்கிய அங்கமான ஃப்யூக்கை இணைத்த ஃப்யூஷன் இளையராஜாவினுடையது. ரஹ்மான் ராக்கிலிருந்து சூபி இசைவரை பல பாணிகளையும் எடுத்தாள்பவர். குளுமையான இசை தருவதில் கை தேர்ந்தவர். அவர் குறுகிய காலத்தில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்ததற்கு மற்றுமொரு முக்கியக் காரணம் அவரது ஒலிப்பதிவுத் திறமை.



நல்ல இசை மட்டுமின்றி உயர்தரமான ஒலிப்பதிவையும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கார்களில் ஸ்டீரியோக்களும் வீடுகளில் ஊஃபர் பொருத்தப்பட்ட ஹைஃபை ஒலி பெருக்கிகளும் வந்துவிட்டிருந்தன. ஆனால் அவற்றில் துல்லியமாகக் கேட்க அதற்கேற்ப ஒலிப்பதிவுசெய்யப்பட்ட திரையிசை வரவில்லை. வந்தது. அதுதான் ரஹ்மானின் இசை. ஒலிப்பதிவையே இசைபோல் ரசிக்க வைத்தவர் ரஹ்மான். அவர் சிறந்த ஒலிப்பதிவாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்வார். அவரே ஒலிப்பதிவுசெய்வதில் நிபுணர். ஒலிப்பதிவுக் கருவிகளை வாங்குவதற்காக நிறையச் செலவிடுபவர்.



ரஹ்மான் மட்டுமின்றி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஆழ்ந்த இறைபக்தியுடையவர்கள்தாம். "சங்கீத ஞானமு பக்திவினா சன்மார்க்கமு கலதே' இருந்தாலும் ரஹ்மானின் பக்தி பற்றியே மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அவரைப் பற்றி அதிகம் வெளி உலகினருக்குத் தெரியாது என்பதால். ஓரளவு பிரபலமான சினிமாக்காரர்களின் வாழ்க்கை வரலாறுகளெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வந்துவிடுகின்றன. ஆனால் உலகம் முழுவதும் அறியப்பட்டுவரும் ரஹ்மானைப் பற்றித் தெரிந்ததெல்லாம் அவருடைய இசை ஈடுபாடும் இறை நம்பிக்கையும் கொஞ்சம் குடும்பப் பின்னணியும்தான். தன்னைப் பற்றி அவரும் அதிகம் பேசுவதில்லை.



அவர் புகழ்பெறத் தொடங்கிய காலத்தில் அவரைப் பலவாறாகவும் விமர்சித்தனர். திரைப்பட இசையமைப்பாளர்கள்கூடப் போட்டி தாங்க முடியாமல் கிண்டல் செய்தார்கள். ஜென்டில்மேன், ரங்கீலா போன்ற படங்களுக்கு இசையமைத்த பின்னர் அவரது வணிகரீதியான செல்வாக்கு மிகவும் உயரத் தொடங்கிற்று. அவர் நினைத்திருந்தால் தனது எதிரிகளுக்குச் சவடாலாகப் பதில் அளித்திருக்கலாம். அவர் மௌனம் காத்தார். சிறு வயதிலிருந்தே தன்னைவிட வயதில் மிகவும் மூத்தவர்களுடன் அவர் பணியாற்றிவந்தவர். பக்குவப்பட்ட நடத்தை அவரிடம் இதனாலும் ஏற்பட்டிருந்தது. அவருக்குத் தன்னம்பிக்கையும் விவேகமும் அதிகம். நண்பர்களிடம் மட்டும் ஒளிவுமறைவின்றித் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவார். இன்று ரஹ்மானின் பாணி பலராலும் பின்பற்றப்படுகிறது. ஆர்மோனியத்திற்குப் பதிலாக இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு வந்துவிட்டது. இசையமைப்பாளர்கள் இரவில் கண்விழிக்கிறார்கள். ஒலிப்பதிவின் தரம் நன்கு கூடியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அவர்தான் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. கோல்டன் க்ளோப், பஃப்டா உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் அவரிடம் குவிந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவருக்குக் கிடைக்கவிருக்கும் ஆஸ்கார்கள் ஒன்றா இரண்டா என்பது பற்றி ஒவ்வொருவரும் ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை பிரசுரமாகும் பொழுது முடிவுகள் வெளிவந்திருக்கும்.



அட்டன்பரோவின் காந்தி (1982) பட ஆடை அலங்காரத்திற்காகப் பானு ஆதையாவிற்கு ஆஸ்கார் தரப்பட்ட பிறகு, சத்யஜித் ராய்க்கு 1992ஆம் வருடம் வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது கிடைத்தது. மரணப்படுக்கையில் கிடந்த அவர் நாக்குக் குழறியவாறு அவ்விருதுக்கு நன்றி கூறியதைக் கல்கத்தாவிற்கு வந்து படம்பிடித்து ஆஸ்கார் விருது மேடையில் ஒளிபரப்பினார்கள். ஆஸ்கார் விருதுக் காட்சிகளிலேயே கோரமானது அதுதான் என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் உடனே ஒப்புக்கொள்வார்கள்.



ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ராய் சாதனைகள் புரிந்துகொண்டிருந்த காலத்தில் அவ்விருது அவருக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஆஸ்காரின் மதிப்பு இந்தியர்கள் மத்தியில் மேலும் உயர்ந்திருக்கும். அந்தக் கசப்பான நினைவை மறக்கடிக்கிறார்போல் சாமியார் மடத்திலிருந்து கொடாக் தியேட்டர் செல்கிற ரஹ்மான் தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படப் பாடல் நிகழ்ச்சியுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி வழியாகக் கண்டுகளிக்கும் வகையில் அகாதமி அவார்டு மேடையேற இருக்கிறார். ஆஸ்கார் விருதுகள் பெற நண்பர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


0 comments:

Post a Comment

Pages