ஸ்ரீதர்: சில குறிப்புகள்

Author: Nagaraji.B /

பாறையை மோதிய இளங்காற்றுடிசம்பர் 21,2008,15:00 IST

ஸ்ரீதர்: சில குறிப்புகள்









உமா வரதராஜன்


கட்டுரை

ஸ்ரீதர் என்றதும் ஒரு நீரோடை இன்னமும் என் மனத்துள் சலசலத்து ஓடிக்கொண்டுதானிருக்கின்றது. மங்கிய நிலவில் காஷ்மீரத்து ஏரியின் படகொன்றிலிருந்து "நிலவும் மலரும் பாடுது' எனக் காதல் வண்டுகள் இரண்டு ரீங்காரமிடுகின்றன. குயிலின் கூட்டுக்குக் குடிவந்த காகத்தின் இறுமாப்புடன் 'தேடினேன் வந்தது' என்றொரு பெண்குரல் துள்ளிக் குதிக்கின்றது. சிதிலமடைந்த மாளிகையின் சுவர்களிலே வொவால்களைப் போல நிராசையின் கனவுகள் தாங்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற வரிகள் பட்டு மோதி அலைகின்றன. சிட்டிபாபுவின் வீணையின் தந்திகளில் தத்தித் தத்தி நடக்கின்ற ஒரு குயில் கேட்கின்றது "சொன்னது நீதானா?' இறுதிக் கணத்தின் ஒளி நடனத்துடன் ஒரு மெழுகுவர்த்தி உருகுகின்றது "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' என. ஸ்ரீதர் தன் பெயருக்கு முன்னால் ஏதும் பட்டங்கள் சூடிக்கொண்டதாக ஞாபகமில்லை. "கல்யாணப் பரிசு" படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் வழங்கப்பட்ட "கலைஞர் திலகம்" பட்டத்தைக்கூட அவர் ஒரு குல்லாபோல் மாட்டிக் கொண்டவரல்ல.



ஸ்ரீரீதரைத் தமிழ்த் திரையுலகின் சாதனையாளர்களில் ஒருவர் எனவும் அவருடைய "கல்யாணப் பரிசை' ஒரு திருப்புமுனைப் படமாகவும் பலர் குறிப்பிடுகின்றனர். இலக்கணத் தமிழைக் கொண்ட புராணப் பட யுகத்திலிருந்து தமிழ் சினிமாவை வேறொரு திசைக்கு நகர்த்தியவர் ஸ்ரீதர்தான் எனக் கூறுவதுமுன்டு. ஆனால் இன்றைய பார்வையில் "பராசக்தி'க்கு இருந்த சமூகக் கரிசனை "கல்யாணப் பரிசு'க்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. "பராசக்தி' தர்மாவேசத்தின் வெளிப்பாடாகவும் அதுவரை நிலவிய தார்மீக மதிப்பீடுகளைச் சவக்கிடங்கில் தள்ளியதாகவும் அமைந்தது. ஆனால் "கல்யாணப் பரிசே?' சற்று நெகிழ்வான இடங்களில் நீரூற்று மேற்கிளம்பும் இள மனங்களின் கனவு பூமி. இன்றைய தினம் "கல்யாணப்பரிசை" புதுமையான ஒரு படைப்பாகக் யாரும் கொள்ளமாட்டார்கள். விக்கல்களுக்கும் கேவல்களுக்கும் மிகைத் தியாகங்களுக்கும் இன்று வரவேற்புக் கிடைப்பதில்லை. தனது குழந்தையை முன்னாள் காதலிக்குக் கல்யாணப் பரிசாக வழங்கிவிட்டு நடையைக் கட்டுவது இன்றைய ரசிகனுக்குப் பெரும் புதுமையாகத் தென்படப்போவதில்லை. மனைவியையே மாற்றானுக்குப் பரிசாக வழங்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் பரந்த மனம் கொண்ட கதாநாயகர்கள் தமிழ்த் திரைக்கு இன்று வந்துவிட்டார்கள். ஸ்ரீதரையும் அவருடைய படங்களையும் இன்றைக்கு யோசிக்கும்போது தென்படும் பொதுமையான முக்கிய அம்சம் இளமனங்களின் உணர்ச்சிப் போராட்டமும் அவற்றுக்கிடையேயான ஊசலாட்டமும்.

அவருடைய ஆரம்ப காலப் படங்கள் இன்றைக்கும் கிழடு தட்டாதவை. அவருடைய சமகாலத்தில் வெளியான பானா, பாவன்னா வரிசைப் படங்களின் சந்தை இரைச்சல் ஸ்ரீதரின் படங்களில் சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இளமையின் சாலையில் அவர் கைவீசி நடந்தவர். இன்னொரு வகையில் அவர் ஒரு Trioligist. முக்கோணக் காதல் ரசத்தை சாறு பிழிந்து தந்துகொண்டிருந்தவர். "கல்யாணப் பரிசு', "நெஞ்சில் ஓர் ஆலயம்' தந்த வெற்றிகளால் தன்னைப் பற்றிய பிம்பமொன்றை வடிவமைத்துக் கொண்ட அவர் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே பின்னாட்களில் ஈடுபட்டார். "வெண்ணிற ஆடை', "நெஞ்சிருக்கும்வரை', "அவளுக்கென்று ஒரு மனம்', "இளமை ஊஞ்சலாடுகிறது', "ஒரு ஓடை நதியாகிறது' போன்றவை இத்தகைய முயற்சிகள்.

பள்ளிக்கு நான் மட்டம் போட்டுவிட்டு அலைந்து திரிந்த ஒரு காலத்தில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துப் பெட்டிக் கடைகளில் பால்கன், பொன்மலர் போன்ற கொமிக்ஸ்களுடன் "சித்ராலயா' என்ற பத்திரிகையும் தொங்கிக்கொண்டிருக்கும். அந்நாளில் வெளிவந்த "பேசும் படம்', "பொம்மை' போன்ற சினிமாப் பத்திரிகையல்ல "சித்ராலயா'. மேற்கத்திய சினிமா செய்திகளுக்கு அது முக்கியமளித்ததாக ஞாபகம். ஸ்ரீதருடைய ரசனையின் அடையாளமாகவும் நாட்டத்தின் இலக்காகவும் அதைக் கொள்ளலாம். அவர் ஹொலிவூட் படங்களின் நேசராக இருந்திருக்க வேண்டும். உச்சி வெயிலில் மெரீனாக் கடற்கரையில் முத்துராமன் கழுத்துப் பட்டியணிந்து "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா...' எனப் பாடுவதற்கு வேறு எந்த விசேஷக் காரணமும் இருந்திருக்காது. அந்நாட்களில் அவர் ஆர்வத்துடன் சந்தித்த ஒரு ஹொலிவூட் இயக்குனர் டேவிட் லீன். பாலு மகேந்திராவுக்குப் பிரமிப்பை ஏற்படுத்திய அதே இயக்குனர்.


ஸ்ரீதர் கதை வசன கர்த்தாவாகவே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். 1954இல் "எதிர்பாராதது' படத்தில் தொடங்கி "அமரதீபம்', "மாதர்குல மாணிக்கம்', "யார் பையன்', "உத்தம புத்திரன்' போன்ற பல படங்களுக்கு அவர் வசனங்கள் எழுதியுள்ளார். அடிப்படையில் வசனகர்த்தாவான ஸ்ரீதர் திரைப் படமொன்றின் முக்கிய லட்சணமான "காட்சி நிலையை' முதன்மைப்படுத்தியவரல்ல. காட்சி என்பது அவரைப் பொறுத்தவரையில் விதவிதமான காமராக் கோணங்கள், இயற்கை எழில் என்பவற்றுடன் பின்தங்கிவிடுகின்றது. வசனங்களே அவருடைய படங்களில் ஆதிக்கம் செலுத்தி நகர்த்திச் செல்லுகின்றன. நாடக பாணியிலிருந்து முற்றிலும் விடுபடாத, ஆனால் முற்றாக அதில் அமிழ்ந்தும் போகாத ஒரு இடைநிலைப் பாணியை அவர் கையாண்டார். ஒளிப் பதிவாளர் வின்சென்டின் பங்கும் இதில் முக்கியமானது. தமிழ்த் திரைப்பட நாயக, நாயகிகளுக்கு நிகராக ஸ்ரீதர் என்ற பெயர் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்த ஆண்டுகளாக 1959 - 1967களைச் சொல்லலாம் இந்தக் காலப்பகுதியில் வெளியான "கல்யாணப் பரிசு', "மீண்ட சொர்க்கம்', "விடிவெள்ளி", "தேன் நிலவு', "நெஞ்சில் ஓர் ஆலயம்', "சுமைதாங்கி', "போலீஸ்காரன் மகள்', "நெஞ்சம் மறப்பதில்லை, "கலைக்கோயில்', "காதலிக்க நேரமில்லை', "வெண்ணிற ஆடை', "ஊட்டி வரை உறவு', "கொடி மலர்', நெஞ்சிருக்கும்வரை போன்ற படங்களின் உள்ளடக்கங்கள் பல்வகையானவையாக இருப்பினும் இள மனங்களின் ஊசலாட்டம் முக்கோணக் காதல் போன்ற அம்சங்களே இப்படங்களுக்கும் அடிநாதம். ஸ்ரீதர் இயக்கிய உல்லாசமான படங்களாகத் "தேன்நிலவு', "காதலிக்க நேரமில்லை", "ஊட்டிவரை உறவு" ஆகியவற்றைச் செ?ல்லலாம். ஸ்ரீதரின் படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தது "காதலிக்க நேரமில்லை'. தமிழின் நகைச்சுவைத் திரைப் படங்களைப் பட்டியலிடும்போது அது சிகரமாகவும் தமிழின் முக்கியப் பெ?ழுதுபே?க்குப் படங்களைக் குறிப்பிடும்பே?து முன்வரிசையிலும் இன்றுவரை உள்ளது. பிரிவின் துயரத்தையும் ஜென்மங்களை வென்று நிலைப்பது காதல் என்ற ஐதீகத்தையும் உருக்கமாக வெளிப்படுத்திய படம் நெஞ்சம் மறப்பதில்லை. மதுமதியின் சாயலில் அமைந்த இந்தப் படம் ஸ்ரீதரின் கையாளுகையால் மூலத்தையும் சில இடங்களில் மிஞ்சிப் பட்டை தீட்டப்பட்டுள்ளது, ஜெயலலிதா தன் வாழ்நாளில் நடிப்பதற்குச் சற்று முயன்ற மூன்று படங்களில் ஒன்றாக வெண்ணிற ஆடையைக் குறிப்பிடலாம்.

"ராஜ பார்வையை' எடுத்து நஷ்டப்பட்ட கதையைச் சொல்லாத கமலஹாசனின் பேட்டியையே? "கலைக்கோயிலை' ஆதரிக்காத தமிழ் ரசிகர்கள் பற்றிச் சாடாத ஸ்ரீதரின் பேட்டியையே? சந்திப்பது அபூர்வம். கலைக் கோயில் (1964இல்) வெளிவந்த காலத்தில் பெரும்பான்மைத் தமிழ் ரசிகர்களின் கொட்டாவிகளையும் முகச் சுளிப்புக்களையும் மிக எளிதாகச் சம்பாதித்திருக்கும். போல்முனி நடித்த A SONG TO REMEMBER இன் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆங்கிலப் படத்தின் பியானே? ஸ்ரீதரின் கலைக்கோயிலில் வீணையாகிவிட்டது. மேடையில் பாடிக்கொண்டே? அல்லது ஆடிக்கொண்டே? சாவை அரவணைக்கும் மிகை உணர்ச்சிப் படக்காட்சிகளுக்கு ஸ்ரீதரும் விலக்களிக்கவில்லை.


ஸ்ரீதர் பிரமாண்டத்தின் திசைநோக்கி நகர்ந்தமைக்கான அடையாளம் 1969இல் வெளிவந்த "சிவந்த மண்'. எளிமையின் அழகை விட்டு அகலத் தொடங்கிய ஸ்ரீதர் GUNS OF NAVARONE பாணியில் எடுத்த இந்தப் படத்தின் அனேகமான பாடற்காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டவை. ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் தொடங்கிவைத்த இந்த "நாகரிகம்' இன்றும் வழக்கொழியவில்லை. ஏதோ ஒரு தேசத்தின் தெருக்களில் நமது நாயக நாயகிகள் கட்டாக் காலிகள்போல இன்றைக்கும் மேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

75க்குப் பின்னர் வெளியான ஸ்ரீதருடைய திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாகப் பெருமை சேர்க்கவில்லை எம்.ஜி.ஆர் - சிவாஜி - இளமை - புதுமை என்ற அலைதலினூடாக அவருடைய பயணம் இலக்கற்றதொன்றாக மாறியிருந்தது. 59இலிருந்து 65வரை அவர் உருவாக்கிவைத்திருந்த பெருமிதங்களை இழக்கும் வகையில் பின்னாட்களில் அவருடைய படங்கள் வரத்தொடங்கின. "வைரநெஞ்சம்', "ஓ மஞ்சு', "மீனவநண்பன்', "உரிமைக்குரல்', சொந்தர்யமே வருக வருக, 'மோகனப் புன்னகை', "துடிக்கும் கரங்கள்', "தென்றலே என்னைத் தொடு’, "நானும் ஒரு தொழிலாளி, உன்னைத் தேடி வருவேன், "இனிய உறவு பூத்தது', "தந்துவிட்டேன் என்னை', "ஆலய தீபம்'... இப்படிப் பல அரை அவியல்கள்.


"அலை கடலில் சிறு தோணி. கலை உலகில் எங்கள் புதிய பாணி' என்பதே ஸ்ரீதரின் நிறுவனமான சித்ராலயா கொண்டிருந்த அடையாள வாசகம். வியாபார அகோர அலைகளுக்கு மத்தியில் ஸ்ரீதரின் காவிய அணுகு முறையும் அவருடைய தோணியும் பின்னாட்களில் நொறுங்குண்டு போனமை ஒரு துயரமான கதைதான்.


0 comments:

Post a Comment

Pages