வங்கம் தந்த சிங்கம் நேதாஜி (23.1.1897 - 18.8.1945)

Author: Nagaraji.B /

வங்கம் தந்த சிங்கம் நேதாஜி (23.1.1897 - 18.8.1945)ஜனவரி 29,2009,22:41 IST

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிர், உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்த வீரத் தியாகிகள் எண்ணற்றவர். அவர்களுக்கு தலைமை தாங்கிய வீரத் தலைவர் ஒரு சிலரில் மிகச் சிறப்பான இடம் பெற்று, இந்திய மக்களின் இதயத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவர் - வங்கம் தந்த சிங்கம் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள். நம் வணக்கத்திற்குரிய அம்மாபெரும் வீரரின் பிறந்த நாள், ஜனவரி 23-ம் தேதி என்பது நம் நினைவிற்குரியது.



நேதாஜிக்குக் காந்திஜியின் அகிம்சை முறையில் நம்பிக்கை இல்லை. அதை ஒளிவு மறைவு இன்றி சொல்லவும் அவர் தயங்கவில்லை. அதே சமயம், சுதந்திரப் போராட்டத்திற்கு காந்திஜியின் தலைமைதான் வேண்டும் என்பதிலும் அவருக்கு சிறிதளவு சந்தேகமும் இருந்தது இல்லை.



லட்சுமணபுரியில் 1936-ல் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கூட இருக்கும்போது, இந்தியாவிற்கு வரும்படி சுபாஷ் போஸுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இவர் தாய் நாட்டில் காலடி வைத்ததும், இவரை அரசாங்கம் கைது செய்து எரவாடா சிறையில் காவலில் வைத்தது. 1938- ல் இவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.





நாடு சுதந்திரமடையும் விஷயத்தில் சுபாஷ் மிக வேகமாகப் போகிறார் என்பது சிலருடைய எண்ணம். "காங்கிரஸ் ஸ்தாபனம் ஒரு போட்டங சர்க்காராகவே செயல்பட வேண்டும் என்றும், மிகப் பெரும் அளவில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும்' என்றும் இவர் கொண்டு வந்த கோரிக்கையை காங்கிரஸ் மகா சபை நிராகரித்ததால், தன்னுடைய 62 ஆதரவாளர்களுடன் இவர் வெளியேறினார்.





1939 -ல், காந்திஜியின் பேராதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டாக்டர் பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து வெற்றி பெற்றார். "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி' என்று காந்திஜி கூறியது இச்சமயத்தில்தான்.



காங்கிரஸ் மேலிடத்தாரிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டதன் காரணத்தினால், ராஷ்டிரபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, "ஃபார்வர்ட் பிளாக்' என்கிற புதிய கட்சியை அவர் தொடங்கினார். இச்சமயம் சென்னையில் இக்கட்சியைத் தொடங்க ராயப்பேட்டையில் உள்ள "காந்தி பீக்' என்ற இல்லத்தில் தங்கியிருந்தார். அன்று மாலை சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் போஸ் பேசினார். எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைமை வகித்தார். அன்றுதான் உலக யுத்தம் ஆரம்பமான செய்தியும் மாலைப் பத்திரிக்கையில் வெளிவந்தது.



இந்திய பூமியில் முதன்முதலாகப் பாரதத்தாயின் சுதந்திர மணிக்கொடியை ஏற்றுவித்த பெருமை சுபாஷ் போஸுக்கே உரியது. இம்பால் சமவெளிப் பிரதேசத்தையே நேதாஜியின் விடுதலை ராணுவம் சில மணி நேரத்திற்குள் பிடித்து விடப் போகிறதென்று உலகமே எதிர்ப்பார்த்தது. ஆனால் நிலைமை மாறிவிட்டது. ஜப்பான் சரணடைந்தது, நேதாஜியைப் பெரும் சோதனைக்குள்ளாக்கிற்று.



நேதாஜி தம் ஏழு தோழர்களுடன் சைகோன் போய்ச் சேர்ந்தார். அதற்குள் விமானப் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதனால் ஹபீபூர் ரஹ்மானை மட்டுமே அவரது இறுதி யாத்திரையில் உடன் அழைத்துச் செல்ல முடிந்தது. இந்த விமானம்தான் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி பார்மோஸாவிலுள்ள டைஹேக்கு என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி, நேதாஜியை மாய்த்து விட்டது. அவர் அமரராகி விட்டார் என்பதில் எத்தனையோ கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அவர் இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல, இந்திய மக்களின் உள்ளங்களில் என்றென்றும் அமரராகவே விளங்குகிறார் என்பது மறுக்க இயலாத உண்மை!

0 comments:

Post a Comment

Pages