கோடைக் காலம் வந்தாச்சு-- பாட்டி வைத்தியம்

Author: Nagaraji.B /

* கோடைக் காலம் வந்தாச்சு. வெய்யில் மண்டையைப் பிளக்கப் போகிறது. குழந்தைகளானாலும், பெரியவர்களா�னலும் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் இந்த நீர்க்கடுப்பு வந்து தொல்லை பண்ணுமே. இதோ, சுலபமான வழி. ராத்திரி படுக்கப் போகும்போது வெள்ளைச் சுண்ணாம்பை தண்ணீர் விட்டுக் குழைத்து, இரண்டு கால்களின் பெருவிரல்களிலும் (நகம் உள்பட) மேல்புறம் பூசிக்கொண்டு தூங்கினால் மறுநாள் காலை விழிக்கும் போது நீர்க்கடுப்பு போயே போச்சு!



* உஷ்ணத்தாலே வயிறு வலிச்சு "நச்சு, நச்சு'னு பேதியாகிறதா? எட்டு மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு கல்லு உப்பு, மூன்றையும் பொடி பண்ணி, சுடச்சுட சாதத்தின் மேல் போட்டு, பொரிய, பொரிய ஒரு ஸ்பூன் நெய்யைக் காய்ச்சி, அதன் மேல் விட்டுப் பிசைந்து, மூன்று கவளங்கள் சாப்பிட்டால் உஷ்ணபேதி உடனே நின்று விடும்.



* சிலருக்கு வெயிலில் வெளியே போய் விட்டு வந்தால் கண்களை இருட்டிக் கொண்டு தலை சுற்றி பூமியே தட்டாமாலை ஆடுவது போல் இருக்கும். கொட்டைப் புளி, ஒரு துண்டு வெல்லம், ஒரு ஸ்பூன் சீரகம் மூன்றையும் ஒன்றாக நசுக்கி, உருட்டி, வாயில் அடக்கிக் கொண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். தலையணை கூடாது. இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும்.



* அட, சூடு அதிகமாகி, கண்ணிலிருந்து ஜலம் கொட்டுகிறதா? கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறதா? ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு சின்ன வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து, கண் இமைகள் மீது ஒற்றி, ஒற்றி எடுங்கள். இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாகத் தெரிவதோடு வலியும் இருக்காது.



* பல் வலியா? நாட்டு மருந்துக்கடையில் லவங்கத் தைலம் கிடைக்கும். அதை பஞ்சில் நனைத்து, வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும்.கெட்ட நீர் வெளியே வருவதோடு கிருமித் தொற்றும் கட்டுப்படும்.



* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை. ஒரு ஸ்பூன் மிளகை தூளாக்கவும். இலுப்பைக் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு துண்டு வெல்லத்தையும், இந்த மிளகுப் பொடியையும் போட்டு சூடு பண்ணவும். திரண்டு வரும்போது இறக்கி, சிறு, சிறு உருண்டைகளாகப் பண்ணி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால், அந்தக்காரம், தித்திப்பு இரண்டும் சேர்த்து, தொண்டையில் இறங்க இறங்க, தொண்டைக்கு இதமாக இருக்கும். வரட்டு இருமலும் குறையும்.

* ராத்திரி முழுவதும் கண் விழித்து பரீட்சைக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த பின்னால் தான் படுத்த ஆரம்பிக்கும். ஆம், அதுதான் பித்தம். சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக்கொண்டு வரும். இதற்கு எளிய வழி உண்டு. 100 கிராம் சீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு பெரிய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து ரசம் எடுத்து, அதில் இந்தச் சீரகத்தை இரண்டுநாள் ஊற வையுங்கள். ரசம் நன்றாக சீரகத்தில் ஏற வேண்டும். வாயில் போட்டுப் பார்த்தால் தெரியும். பிறகு ஊறிய சீரகத்தை எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். பித்தம் அதிகமாகி, குமட்டிக் கொண்டு வரும்போது, ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பித்தம் தானாக குறையும்.

* காலில் பித்த வெடிப்பா ? மெழுகுவர்த்தி எரியும் போது உருகி வரும் மெழுகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் இந்த மெழுகைக் கலந்து வெடிப்பின் மேல் தடவி ஒரு பழைய ஸாக்ஸை போட்டுக் கொண்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் ஒரு வாளியில் மிதமான வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பிடி கல் உப்பைப் போடுங்கள். உப்பு கரைந்ததும் அதில் இரண்டு கால்களையும் ஐந்து நிமிடம் வைத்திருங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் வெடிப்பு மறைவதோடு உள்ளங்காலும் மெத்தென்று பட்டுப் போலாகும்.



* வயிறு மப்பும், மந்தாரமாக இருக்கிறதா? குழந்தைக்கு என்றால், இதை மந்தம் தட்டியிருக்கிறது என்போம். பெரியவர்களுக்கானால் இதை "அஸிடிட்டி' என்போம். இதற்கு கைகண்ட மருந்து ஓமம்தான். இரண்டுதம்ளர் சுத்தமான தண்ணீரில் ஒரு பிடி ஓமத்தைப் போட்டு நன்றாகக் கொதிக்க வேண்டும். இரண்டு தம்ளர் ஒரு தம்ளராகச் சுண்ட வேண்டும். இந்த ஓம ரசத்தை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவர்களுக்கு அரைத் தம்ளரும் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை என்று மூன்று நாள் சாப்பிட்டால் இந்த மந்தம் குறைந்து ""கலகல'' என பசி எடுக்கும். புளி ஏப்பமும் குறையும்.



* வாய்ப்புண். இது வந்து விட்டால் ஒன்றும் சாப்பிட முடியாது. ஏன்? சிலருக்கு நாக்கைச் சுழற்றி பேசக்கூட முடியாது. ஒரு துண்டு கொப்பரை, ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர் பசும்பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து காலையும், மாலையும் மூன்று நாள் சாப்பிட்டால் வாய்ப்புண் மறைந்து போகும். வாய்ப்புண் அதிகமாக இல்லாமல் ஒன்று, இரண்டு இருந்தால் நாக்குக்கு அடியில் ஒரு துண்டு கொப்பரையை அடக்கிக்கொண்டால்கூட போதும். அந்த ரசம் புண்ணின் மேல் படப்பட அதன் வீரியம் குறைவதோடு, இன்னொரு இடத்திலும் வராமலும் இருக்கும்.

0 comments:

Post a Comment

Pages