ஒரு சாப்பாடு 37 பைசா

Author: Nagaraji.B /

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி தொழிலாளர் போராட்டத்தினால் பத்திரிகை காரியலாயத்தைக் கதவடைப்பு செய்துவிட்டார் திரு.கோயங்கா அவர்கள். லேபர் கமிஷனரின் சமரச முயற்சி தோல்வி அடைந்தது. சில காலம் கழித்து சித்தூரிலிருந்து எக்ஸ்பிரசும் தினமணியும் வெளிவந்து கொண்டிருந்தன. நாங்கள் கேண்டீனை மூடிவிட்டோம். P.M.G. ஆபீசும், மவுண்ட் ரோடு புதிய கட்டிடத்தில் இயங்கியது.

A.G.S. ஆபீசும் தேனாம்பேட்டையில் புதிய கட்டிடத்தில் இயங்கியது. எனவே எங்களுக்கு வியாபாரம் இல்லாததால் நாங்களும் மூடிவிட்டு வெளியில் வியாபாரத்துக்கு (இதே ஓட்டலுக்கு) இடம் தேடிக்கொண்டிருந்த சமயம் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். கிண்டியில் ரயில் நிலையம் அருகில் ஒரு சாய் பாபா கோவில் இருக்கிறது. அதை லோகனாத முதலியார் என்ற பெரியவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்தப் பகுதியில் நிறைய காலி இடங்கள் இருக்கின்றன. அவரைப் போய் பாருங்கள் உங்கள் ஓட்டலுக்கு இடம் கிடைக்கும் என்றார்.
நானும் என் சகோதரரும் மறுநாள் காலை 8 மணிக்கு ஆலந்தூர் பஸ்ஸில் ஏறி கத்திப்பாரா என்ற பஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கினோம். அதன் அருகில் ரயிலடியும் சாய்பாபா கோவிலும் இருந்தது. கோவிலில் வாசல்படியில் இருவரும் உட்கார்ந்தோம். அப்பொழுது சுமார் 50 வயது மதிக்கக் கூடிய ஒரு பெரியவர் வந்து எங்களைப் பார்த்து கோவிலுக்கா வந்திருக்கிறீர்கள்? உள்ளே போய் பாபாவைப் பாருங்கள் என்றார். ஆமாம் நாங்கள் சாய் பாபாவையும் உங்களையும் பார்க்கதான் வந்தோம் என்று சொல்லிவிட்டு முதலில் பாபாவை தரிசனம் (ஷீரடி சாய் பாபா) செய்துவிட்டு அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்த ஒரு பெண்மணி 40 வயதுக்குள் இருக்கும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவர்; கமலா என்று கூப்பிட்டு எங்களைச் சுட்டிக்காட்டி ஐயர் பாக்டரி பக்கத்தில் இருக்கும் இடத்தை இவர்களை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்துவா என்றார். எனக்கும் சகோதரருக்கும் ரொம்ப சந்தோஷம். பெரியவர்தான் என்று மனதில் வாழ்த்திக் கொண்டே அந்த பெண்மணியுடன் போனோம். அது ஆலந்தூருக்குத் திரும்பும் வழியல் முதலில் இருந்தது. நீண்ட ஹால், பின் பக்கம் முழுதும் அதே மாதிரி காடிகானாவைப் போல் இருந்தது. ஆனால் ரோடிலிருந்து சுமார் 100 அடி தள்ளி இருந்தது. அப்பொழுது அங்கே கிண்டி தொழில்பேட்டை உருவாகிக் கொண்டிருந்தது.

காமராஜ் முதல்வர். இவருக்குத் துணைவராக சுப்ரமணியம், பக்தவம்சலம், R. வெங்கட்ராமன் போன்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றும் ஒருங்கே நிறைந்த மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை உள்ள மந்திரிகள் ஆண்டு கொண்டிருந்த காலம். இந்த இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட் அங்கு வந்ததினால் வெறும் குதிரைப் பந்தய சூதாடிகள் மட்டுமே அறிந்திருந்த கிண்டி எல்லோருக்கும் தெரிந்த இடமாய் தொழில் பேட்டை ஆனது. அதற்கு காரணம் காமராஜ் மந்திரிசபையில் இந்த R. வெங்கட்ராமன்தான். இடத்தைப் பார்த்துவிட்டு லோகனாத முதலியாரிடம் வந்தோம். ''இடம் பிடித்து இருக்கு சார், வாடகை அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும்'' என்று கேட்டோம். அதற்கு அந்த பெரியவர் (வயதிலும் மட்டுமல்ல, மனதிலும் மிகப் பெரியவர்) சொன்னார். ''தம்பி, எனக்கு அட்வான்ஸ் எதுவும் வேண்டாம். உங்களால் அந்த இடத்தில் ஓட்டல் நடத்த முடியுமா?'' என்று கேட்டார். ''முடியும்'' என்று என் சகோதரர் கூறினார். ''சரி அப்படியானால் தினசரி 5 ரூபாய் வாடகையைக் கொடுத்து விடுங்கள். அட்வான்சும் தேவை இல்லை. மாத வாடகை வேண்டாம். தினசரி 5 ரூபாய் வீதம் கொடுத்து விடுங்கள். ஓட்டலுக்கு ஏற்றபடி இடத்தை உங்கள் செளகரியப்படி உங்கள் செலவில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். எங்களக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அவ்வளவு இடத்திற்கு 500 ரூபாய்க்கு குறைந்து வாடகைக்கு நிச்சயம் கிடைக்காது. அந்தப் பெரியவர் வக்கீல் தொழில் நடத்தி வந்தவராம். இப்பொழுது தான் மட்டும் அங்கே இருக்கிறார். குடும்பம் வெவ்வேறு இடத்தில் வசதியாக இருக்கிறார்கள்.
தினமணி ஆபீஸில் கேன்டீன் நடத்தி சுமார் 10,000 ரூபாய் வரை சம்பாதித்து பேங்கில் போட்டிருந்தோம். 5 ஆயிரம் எடுத்து எல்லாச் சாமான்களும் புத்தம் புதியதாக ஆர்டம் கொடுத்து வேலைக்கு ஆட்களும் ஏற்பாடு செய்து 1960 ஜூன் மாதம் 1 தேதி விக்னேஸ்வர பவன் என்ற பெருடன் ஓட்டலை திறந்தோம். 2000 நோட்டீஸ் அடித்து இண்டஸ்டிரியல் எஸ்டேட் முழுவதும் கொடுத்தோம். கத்திப்பாரா என்ற பெயர் உள்ள இடத்தில், தொழில் பேட்டைக்கு எதிர்ப் பக்கம் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்தோ அல்லது அதற்கு அப்பாலிருந்தோ பஸ்ஸிலும், காரிலும் சைக்கிளிலும் நடந்தும் வருபவர் கண்ணில் பார்வையில் எங்கள் விக்னேஸ்வர பவன் படாமல் தப்ப முடியாது. எங்கள் எதிர்பார்ப்பைவிட வியாபாரம் இருமடங்கு நடந்தது. நாங்கள் எதிர்பார்த்தது 200 -லிருந்து 300 வரைதான். ஆனால் 550-லிருந்து 600 வரை நடந்தது. தினமணிக்குக் கேண்டீனில் 6 பேர்கள் மட்டுமே வேலைக்கு இருந்தார்கள். இந்த கடைக்கு மொத்தம் 22 பேர்கள். எல்லோருக்கும் வாரச் சம்பளம். இரண்டு சமையல்காரர்களுக்கு மட்டும் மாதச் சம்பளம். எல்லாருக்கும் தினசரி நான்கு அணா. அந்த காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்காகவும், மற்ற சில்லறை செலவுகளுக்காகவும் எல்லாம் ஓட்டல்களிலும் கொடுப்பது வழக்கம்.
1961 -ஆம் ஆண்டு விலைவாசிப்படி எங்கள் ஓட்டலின் விலைகளை உள்ளபடி எழுதியிருக்கிறேன்.
அளவு சாப்பாடு 37 பைசா (அதாவது 6 அணா) சாப்பாடு வாழை இலையில்தான். 1 பொரியல், 1 கூட்டு, 1 பச்சடி, 1 அப்பளம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய்.
மற்ற விலைகள்:
கப் காபி 12 காசு, தோசை 12 காசு, பூரிகிழங்கு 12 காசு, பொங்கல் 12 காசு, மசால் தோசை 15 காசு, இட்லி 5 காசு, வடை 5 காசு.
-
'ஜெமினி கேன்டீண்' நூலிலிருந்து....
புத்தகம் கிடைக்குமிடம்:
சாந்தி பதிப்பகம்
27, அண்ணா சாலை
சென்னை - 600 002

0 comments:

Post a Comment

Pages