ஃப்ராடு பார்ட்டி -"ஹைடெக்'' ஆன்ட்டி; ஜாக்கிரதை !

Author: Nagaraji.B /

என் மகள் சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில், இன்ஜினியரிங் படிக்கிறாள். விடுமுறை நாட்களில் திருவனந்தபுரம் வருவதற்கு மதுரையிலிருந்து இரவு ரயிலில் வருவாள். சென்ற முறை மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது ஒரு படித்த, பணக்காரத் தோற்றமுடைய நடுத்தர வயதுப் பெண்மணி என் அருகில் வந்துப் பேச்சுக் கொடுத்தாளாம்.
தான் தன் மகனுடன் வந்திருப்பதாகவும், மும்பையில் புகழ்பெற்ற கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாளாம். தொடர்ந்து தான் பிள்ளை பிட்ஸ்பிலானியில் படிப்பதாகவும், பெண் எம்.என்.சி. கம்பெனியில் கன்சல்டன்ட்டாக இருப்பதாகவும் கூறியிருக்கிறாள். மிகச் சரளமாகப் பேசியதால் என் மகள் படித்த குடும்பம் என்று நம்பியிருக்கிறாள்.
அதன்பின் உன் பேரென்ன ? என்ன படிக்கிறாய் ? ஏன் இந்த சப்ஜெக்ட் எடுத்தாய் ? இந்த சப்ஜெக்ட்டிற்கு என்ன ஸ்கோப் ? இப்படிப் பல விஷயங்களைப் பற்றிக்கேட்டு சில விளக்கங்களும் கொடுத்திருக்கிறாள்.
என் மகள், ""ஆஹா...! இந்த ஆன்ட்டிக்கு எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கு ?'' என்று நினைத்தபடி வாயைப் பிளந்து கொண்டு கேட்டாளாம்.
குடும்ப விசாரணை முடிந்ததும், தான் ராமேஸ்வரம் வந்ததாகவும் வந்த இடத்தில் தங்களுடைய அத்தனைப் பொருள்களும் தொலைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறாள். ""யாராவது ஒரு ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் நாங்க ஊர்ப் போய்ச் சேர்ந்தது திருப்பி அனுப்பிடுவோம். ஜஸ்ட் அக்கவுண்ட் நம்பர் தந்தால் போதும். உடனே ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன். அதான்... நீ காலேஜ் கேர்ள் இல்லையா ? உன்கிட்டே அதிக பணம் இருக்காது.'' என்று மெதுவாகக் கேட்டிருக்கிறாள்.
என் பெண் உஷாராகி விட்டாளாம். ""ஆன்ட்டி... உங்க க்ரெடிட் கார்டு நம்பர் தெரிஞ்சா நீங்க இங்கேயே நெட்டில் இ-டிக்கெட் புக் பண்ணி ஊருக்குப் போகலாமே ? போலீஸூக்குப் போன் பண்ணினால் அவங்க ஏதாவது உதவி பண்ணுவாங்க.....'' - இப்படி என் பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ""எக்ஸ்க்யூஸ் மீ...என் பையன் அங்க தனியா இருக்கான். வரட்டுமா ?'' என்று சென்று விட்டாளாம்.
நுனி நாக்கு ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டும் இப்படிப்பட்ட ""ஹைடெக்'' ஆன்ட்டிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

-- சியாமளா சுவாமிநாதன், திருவனந்தபுரம்

0 comments:

Post a Comment

Pages