கரையேற்றும் கரையீஸ்வரர்

Author: Nagaraji.B /


வாழ்வில் கரையேற விரும்புவோருக்கு நல்வழி காட்டி அருள்புரியும் திருக்கரையீஸ்வரர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் பெரணமல்லூரில் கோயில் கொண்டிருக்கிறார். புராதனமான இக்கோயிலின் கும்பாபிஷேகத் திருப்பணி தற்போது துவங்கியுள்ளன.
தல வரலாறு: சிவபக்தனான கோச்செங்கட்சோழன், கட்டிய கோயில் இது. முற்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனையாறு ஓடியது. இதன் கரையில் மன்னன் கோயிலைக் கட்டினான். அம்பாள் திரிபுர சுந்தரிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. கரையில் கோயில் கொண்டதாலும், பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோட்சமாகிய கரைக்கு கரையேற்றி விடுவதாலும் இத்தல சிவனுக்கு "திருக்கரை ஈஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
மன்னன் பெயரில் தீர்த்தம்: கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள சன்னதியில் சிவன், சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். சிலந்தி ஒன்று, தான் செய்த சிவ புண்ணியத்தால் மறுபிறப்பில் கோச்செங்கட்சோழ மன்னனாகப் பிறந்ததாக ஒரு தகவல் உண்டு. இவன் கட்டிய கோயில் என்பதை உணர்த்தும் விதமாக இங்குள்ள மண்டப தூணில் யானை, சிலந்தியின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தீர்த்தக்குளமும் இவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள தூண்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. விதானத்தில் (மேல் சுவர்) நாக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான வாசல் தென்திசையில் உள்ளது. வெளியில் தீபஸ்தம்பம் உள்ளது. இதில் சிவனுக்குரிய சூலம், சூரியன், சந்திரன், நந்தி, விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி கோஷ்டத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சுரக்கும் சிற்பம் உள்ளது.
விசேஷ விநாயகர்: பிரகாரத்தில் மிகவும் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிலை உள்ளது. இவர் புடைப்புச்சிற்பமாக, இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இருக்கிறார். ஐப்பசி பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடக்கும். பவுர்ணமி, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா உள்ளனர். பிரகாரத்தில் முருகன், நவக்கிரகம், பைரவர் சன்னதிகள் உள்ளன.
ஜேஷ்டாதேவி: இக்கோயிலில் மகாலட்சுமியின் சகோதரி ஜேஷ்டாதேவி சிலை, ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளது. இவள் இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறாள். இவள் கையில் காகக் கொடி வைத்திருக் கிறாள். காலுக்கு கீழே கழுதை வாகனம் உள்ளது. உடன் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
ஊர் சிறப்பு: இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப் பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் உள்ள எறும்பூர், ஆவணியாபுரம், இஞ்சிமேடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் சிவன் கோயில்கள் உள்ளன. தவிர, வீற்றிருந்த பெருமாள், வளர்கிரி வேல்முருகன், கண்ணன், வரத ஆஞ்சநேயர், அங்காள பரமேஸ்வரி மற்றும் சமணர் கோயில்களும் உள்ளன. இவ்வூரின் வடக்கு திசையில் எட்டியம்மன் கோயில் உள்ளது. இவளே இவ்வூரில் காவல் தெய்வமாவாள். இந்த அம்பிகையின் எதிரே பலிபீடம், யானை சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் அருகில் அழகிய ஆண் சிலை ஒன்றுள்ளது.
திருப்பணி: இந்த சிவன் கோயிலைத் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த பணிகள் துவங்கியுள்ளன. திருப்பணியில் பங்கு பெற விரும்புவோர் அறங்காவலர் குழுத்தலைவர் புலவர் பெரியசாமியை தொடர்பு கொள்ளலாம்.
இருப்பிடம்: திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., தூரத்திலுள்ள ஆரணி சென்று, அங்கிருந்து 18 கி.மீ., சென்றால் பெரணமல்லூரை அடையலாம். வந்தவாசியில் இருந்து சட்டந்தாங்கல் வழியாக ஆரணி செல்லும் வழியில் 22 கி.மீ., சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
போன்: 94867 26471

0 comments:

Post a Comment

Pages