மஞ்சரி : 10/10 எப்போதும் வெற்றி ! எல்லோருக்கும் வெற்றி !! - நந்தவனம் சந்திரசேகரன்

Author: Nagaraji.B /

10/10 எப்போதும் வெற்றி ! எல்லோருக்கும் வெற்றி !! - நந்தவனம் சந்திரசேகரன்
ஜூன் 22,2009,08:49 IST

வாழ்க்கை அழகானதாக அமைய வேண்டுமானால் பலவகையான முயற்சிகளால் செதுக்கப்பட வேண்டும். தோல்விகளைத் தாங்கும் மனஉறுதி அவசியம் வேண்டும். வாழ்க்கையினுள் மறைந்திருக்கின்ற வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றுவதற்காகத்தான் நாம் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். சும்மா ஓடினால் கிடைக்குமா ? குறிப்பிட்ட கோடுகளின் இடைவெளியில்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டும். அந்தக் கோடுகளைப் போல் வெற்றி பெறுவதற்குக் கீழ்க்கண்ட பத்து வழிகளைப் பயன்படுத்தினால் எளிதில் கோப்பை நம் கைக்கு வரும்.





1. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்





வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து விட்டால் மனதில் அது பற்றியே அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது முயற்சிகளில் இருந்து விலக மாட்டேன் என்ற உறுதியோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் வெற்றி பெறுவேன் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.




2. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்




வெற்றிச் சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது, தவறிக்கூட குறுக்குவழி பற்றிய சிந்தனை வரக்கூடாது. குறுக்குவழி நம்மைச் சறுக்கலில்தான் கொண்டுபோய் விடும். எப்படிப்பட்டச் சூழலிலும் நேர்வழிகளில் மட்டுமே நமது முயற்சிகளில் இருக்க வேண்டும். தாவிக்குதிக்க நினைத்தோமானால் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் விழுந்து விடுவோம் என்பதை மறந்து விடக்கூடாது.





3. வாய்ப்புக்களைப் பயன்படுத்திடத் தயாராக இருக்க வேண்டும்





வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதைப் பயன்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். நழுவவிட்டோமானால் பின்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வராமல் கூட போகலாம். எப்போது போர் வந்தாலும், சண்டையிடத் தயராய் இருக்கும் போர் வீரனைப்போல் நாமும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகள் வரும்போது கொக்கைப் போல் உடனே கவ்விக்கொள்ள வேண்டும்.





4. வாய்ப்புக்களைத் திறக்கும் சாவி உழைப்புதான்





வாய்ப்பு என்பது சும்மா வராது. உங்களின் கடினமான உழைப்பு தான் உங்களின் வாய்ப்பைத் தேடித்தரும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, பணிவு, வேலையின் மீது காட்டும் அக்கறை... இவற்றை வைத்துத்தான் உங்களுக்கான வாய்ப்பு தேடி வரும். எனவே எப்போதும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.





5. துணிச்சலான முடிவுகள் எடுக்க வேண்டும்





ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது. அப்போது எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் இதை என்னால் செய்ய முடியும் என்று துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். உங்கள் திறமையை வைத்துத்தான் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறு தயக்கமும் இல்லாமல் அதைச் சவாலாக ஏற்று வெற்றியடைய முயற்சி செய்ய வேண்டும். என்னால் முடியும் என்று முடிவெடுக்கும் துணிச்சலே உங்களுக்குப் பாதி வெற்றியைத் தந்து விடும்.





6. முடியாது, நடக்காது என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது





வெற்றிப் பெற வேண்டும் என்று முயற்சிகளில் நாம் ஈடுபடும் போது சில எதிர்மறை எண்ணங்களும் நம்மை வந்து தாக்கும். என்னால் முடியுமா ? அது நடக்குமா ? என்ற எதிர்மறையான எண்ணம் நம் முயற்சிகளைத் தடுக்கும். இதை வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாகக் கூட முடியாது, நடக்காது என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. முயற்சி செய்து பார்க்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன் என்று நேர்மறையாகவே பேச வேண்டும்.





7. எதையும் நாளை என்று தள்ளிப்போடக் கூடாது





வெற்றியாளராக வேண்டும் என்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும். நாளை என்று தள்ளிப் போடும் வேலை, நாளை நடக்காமலே போகலாம். தள்ளிப் போடுவற்கு முக்கிய காரணம் சோம்பல்தான். எந்த வேலையையும் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். அன்றைய வேலையை அன்றே முடித்து விட்டு நாளை புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றியின் இலக்கை விரைவில் தொட வேண்டுமானால் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும்.





8. மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது





நம்முடைய வெற்றிக்கு மற்றவர்கள் வந்து வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நாமே சுயமாக முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆலோசனை வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், முடிவெடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். யாராவது வழி நடத்தினால் தான் என்னால் இயங்க முடியும் என்ற இயந்திரத்தனமாக இருக்கக் கூடாது. நமக்குச் சிந்திக்கத் தெரியும். எனவே நாமே சுயமாக இயங்க வேண்டும்.





9. எதற்கும் கவலைப்படக் கூடாது. கவலையில் எந்த நன்மையுமில்லை




எதற்காகவும், எப்போதும் நாம் கவலைப்படக் கூடாது. கவலைப்படுவதால் எந்தப் பயனும் வரப் போவதில்லை. கவலை என்ற சிலந்தி நம் தலைக்கு மேல் கூடு கட்டி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அடுத்த முயற்சியை நாம் மறந்து விடுவோம். எடிசன் ஒரு பேட்டரியை உருவாக்க எட்டாயிரம் முறை தோல்வியைச் சந்தித்தாராம். எனவே, சோதனைக்குப் பின்புதான் சாதனை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.





10. பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதைவிட, செய்யும் காரியத்தைப் பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்





எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடைய வேண்டுமானால், அதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும். முழுமையான ஈடுபாடு தான் முழுமையான வெற்றியைத் தரும். எனக்குப் பிடித்தமான வேலைதான் என்று ஏனோதானோ என்று செய்யாமல் விருப்பத்துடன் நம் கவனம் முழுவதையும் அதில் குவித்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை எட்ட முடியும்.





""எல்லா ஆற்றல்களும் உன்னுள் குடி கொண்டு இருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்வதுபோல் மேலே கண்ட பத்து வழிகளைப் பயன்படுத்தி உங்களின் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்ற முயலுங்கள்.'' -





""இனிய நந்தவனம்'' மாத இதழிலிருந்து.

0 comments:

Post a Comment

Pages