Tipping Point...

Author: Nagaraji.B /

டிப்பிங் பாயின்ட் என்றால் என்ன? ஏதாவது ஒரு சமூகப் பழக்கம் அல்லது ஒரு புதிய பொருள் அல்லது ஒரு புத்தகம் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்து, காட்டுத் தீ போல் பரவுவதை பார்த்திருக்கிறோம். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தால், ஒரு சிறிய விஷயம்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். அந்தச் சிறிய விஷயம்தான் டிப்பிங் பாயின்ட்.
இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள பல பொருட்கள் லேசில் அசைக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், சரியான இடத்தில் ஒரு சிறிய தள்ளு தள்ளினால், அது அசைந்து கொடுக்கத்தான் செய்கிறது. அந்தச் சரியான இடம்தான் டிப்பிங் பாயின்ட். இதை எப்படி நம் வசப்படுத்துவது என்கிற நெம்புகோல் சூத்திரம், சக்ஸஸ் ஃபார்முலா. அதைத்தான் இந்தப் புத்தகம் அருமையாகச் சொல்லி இருக்கிறது. 1958-இல் வுல்வரின் வேர்ல்ட் வைட் (Wolverine World Wide) என்ற நிறுவனம் ஹஷ் பப்பீஸ் ஷூக்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. பன்றித் தோலால் செய்யப்பட்ட இந்த ஷூக்களின் அடிப்பாகம் (Sole) ரப்பரால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணங்களால், ஹஷ் பப்பீஸ் மக்கள் மனங்களில் நச் என்று இடம் பிடித்தது; விற்பனை பல லட்சம் ஜோடிகளாகிச் சிகரம் தொட்டது.
1994-ல் விற்பனை சரியத் தொடங்கியது. அந்த வருட விற்பனை 30,000 ஜோடிகளே. தயாரிப்பை நிறுத்த முடிவு செய்தது கம்பெனி. அப்போது ஓர் ஆச்சரியம்.... கம்பெனி எந்த முயற்சியும் எடுக்காமலே, விற்பனை எகிறத் தொடங்கியது. 1995-ல் விற்பனை 4 லட்சம் ஜோடிகள்; 1997-ல் 17 லட்சம் ஜோடிகள். எப்படி நடந்தது இந்த ஜீபூம்பா வேலை?
செசமி ஸ்ட்ரீட் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி. அமெரிக்கக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை சுவாரசியமாக ஊட்டுவதற்காக 1969-ல் தொடங்கியது இந்த நிகழ்ச்சி. இன்று 120 நாடுகளில் 350 சேனல்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு 80 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகி, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக வருடங்கள் ஓடும் தொடர் என்ற பெருமையையும் நூற்றுக்கணக்கான விருதுகளையும் இந்த நிகழ்ச்சி பெற்றது எப்படி?
நமக்குள்ளும் இப்படி விடைகள் கிடைக்காத புதிர்கள் பல உண்டு. நாம் இந்தக் கேள்விகளை அடிமனத்தில் ஆராரோ பாடி தூங்க வைத்துவிடுகிறோம். ஆனால், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மால்கம் க்ளேட்வெல், கொஞ்சம் வித்தியாசமாக, தன் மனத்தில் எழுந்த பெரிய கேள்விகளை ஆழமாக ஆராய்கிறார்; அதற்கான விடைகளைச் சொல்கிறார். அவர் கண்டுபிடித்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். புத்தகம் வெளியான ஆறே வருடங்களில் அமெரிக்காவில் மட்டும் 20 லட்சம் பிரதிகள் விற்பனையானது என்கிற தகவலே போதும், இதன் வரவேற்பை எடுத்துச் சொல்ல.
க்ளேட்வெலின் இந்த அமோக வெற்றிக்குக் காரணம், அவருடைய தர்க்க ரீதியான, வித்தியாசமான சிந்தனை. நாம் விடைகள் தேடும் பல கேள்விகளுக்கு க்ளேட்வெல் தரும் பதில்களும் அவர் எடுத்துவைக்கும் வாதங்களும் நாம் ஆண்டாண்டு காலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஏராளமான கோட்பாடுகளைத் தகர்க்கின்றன.
சில உதாரணங்கள்:
குழந்தைகளின் அறிவு மற்றும் குணங்கள் டி.என்.ஏ. காரணங்களால் மரபணுக்கள் மூலம் நிச்சயிக்கப்படுகின்றன. இது அறிவியல் உண்மை. டி.என்.ஏ. தவிர, பெற்றோர் நம்மை வளர்க்கும் முறையும் குண நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம் நீண்ட கால நம்பிக்கை. 'இல்லை' என்கிறார் புத்தக ஆசிரியர் க்ளேட்வெல். பெற்றோர் வளர்ப்பினால் பாதிப்பு ஏற்படாது; சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் சம வயதினரின் தாக்கமே பாதிப்பை உண்டாக்கும் என்று வாதிடுகிறார், நாமே ஒப்புக் கொள்ளும் விதத்தில் அழகாக, ஆணித்தரமாக.
'புகை பிடிப்பதைத் தடுக்க மக்கள் மனத்தில் கேன்சர் பயத்தை ஏற்படுத்துகிறோம்; விற்பனையைக் கட்டுப்படுத்துகிறோம்; பொது இடங்களில் புகைக்கத் தடை விதிக்கிறோம். இவை அத்தனையும் மிகக் குறைவான பலன்களையே தரும். புகை பிடித்தலுக்கு முக்கிய உந்துதல் மனச்சோர்வு. இதைத் தடுத்தால் மட்டுமே புகை பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்கிறார். மறுக்க முடியவில்லை.
இப்படி ஏராளமான புதுமைக் கருத்துக்கள். அத்தனையிலும் என்னை மிகவும் கவர்ந்தது க்ளேட்வெலின் தி ரூல் ஆஃப் 150. கூட்டங்கள், தொழிற்சாலைகள் திறமையாகச் செயல்பட வேண்டுமெனில் அவை அணிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அதன் மொத்த அங்கத்தினர்கள் எண்ணிக்கை நூற்று ஐம்பதைத் தாண்டக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை இந்தப் புத்தகத்தில் ஆணித்தரமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
க்ளேட்வெல் முக்கிய டிப்பிங் பாயின்ட்டாக எதைச் சொல்கிறார்? எந்தக் கருத்தையும் வீரியத்தோடு பரப்ப வேண்டுமானால், வாய்வழிச் செய்தி மிக மிக முக்கியமானது. சரியான தொடர்பாளர்கள் மூலமாகச் செய்தி பரப்பப்பட்டால், வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்கிறார். இந்தச் சரியான தொடர்பாளர்களை க்ளேட்வெல் 'மாவென்'கள் என்று அழைக்கிறார். 'மாவென்'கள் பரந்த அறிவு கொண்டவர்கள்; தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சுயநலமே இல்லாமல் தங்கள் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள்; எல்லோருடனும் தயக்கமில்லாமல் பழகும் சமூகத் திறமை பெற்றவர்கள். உங்களுக்குத் தெரிந்த எல்லா டிப்பிங் பாயின்ட்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். அவற்றுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு 'மாவென்' இருப்பார்.
புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்த சித்தார்த்தன் சுந்தரம், நிச்சயம் கை குலுக்கலுக்குத் தகுதியானவர். மொழிபெயர்ப்புப் புத்தகம் என்ற உணர்வே தோன்றாமல் எளிமையாக, சுவாரஸ்யமாக புத்தகத்தைத் தமிழில் தந்திருக்கிறார்.
சின்ன ஆலோசனை... ஹஷ் பப்பி பற்றி மட்டுமே முதல் அத்தியாயம் விளக்குகிறது. அப்புறம் வரும் செசமி ஸ்டிரீட், பாஸ்ட்டன் டீ பார்ட்டி போன்ற உதாரணங்கள் அமெரிக்க வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. நமக்கு இந்த உதாரணங்கள் தெரியாதவை. எனவே, ஆசிரியரின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது. இவை போன்ற உதாரணங்களின் பின்புலங்கள் புத்தகத்தின் ஆரம்பத்திலோ அல்லது ஆங்காங்கேயோ விளக்கியிருந்தால், இன்னும் எளிதாகப் புரிந்திருக்கும். ஃப்ரான்சிஸ் பேக்கன் சொல்வார்: ''சில புத்தகங்கள் ருசிக்க; சில விழுங்க; சில சுவைத்துச் சாப்பிட்டுச் செரிக்க.'' இந்தப் புத்தகம் நிச்சயமாக மூன்றாம் வகைதான்.
 

0 comments:

Post a Comment

Pages