Employees First....

Author: Nagaraji.B /

பெரும்பாலான கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் 'வாடிக்கையாளர்தான் ராஜா' (Consumer is the King) என்று எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'கA Customer is the most important visitor to our premises என்று மகாத்மா காந்தி சொன்னதாக பல இடங்களில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் ஹெச்.சி.எல். டெக்னாலஜியின் சி.இ.ஓ. வினித் நய்யார், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத்தான் முதல் மரியாதை; அதற்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் என்று ஒரு 'தடாலடி'யான கருத்தைத் திடமாகக் கூறியதுடன், அதை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார். இந்தப் புதுமையான கருத்து தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவி யிருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தில் பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.







1976-ல் சிவ் நாடார் ஆரம்பித்த ஹெச்.சி.எல். குழுமம் 25 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி டாலர் வருமானத்திலிருந்து 500 கோடி டாலர் வருமானத்துக்கு உயர்ந்தது. 2000 முதல் 2005 வரை நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது ஒரு தேக்கம் தெரிய ஆரம்பித்தது. நிறுவனத்தில் உள்ள பலரும் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சியில் திளைத்திருந்ததால் மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை அவதானிக்கத் தவறிவிட்டார்கள்.



இந்த சமயத்தில்தான் சிவ் நாடாரின் வேண்டுகோளுக்கிணங்க ஹெச்.சி.எல்.டி.யின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வினித். அதற்குப் பிறகு நடந்தது வரலாறு! இன்றைக்கு 26 நாடுகளில் சுமார் 58,000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தின் (ஹெச்.சி.எல்.டி மற்றும் இது சார்ந்த நிறுவனங்கள்) வருமானம் கிட்டத்தட்ட 260 கோடி டாலர்! ஹெச்.சி.எல். நிறுவனம் 500 கோடி டாலர் வருமானத்தை எட்ட பல ஆண்டுகள் ஆனது. ஆனால் ஹெச்.சி.எல்.டி.



260 கோடி டாலர் வருமானத்தை எட்ட எடுத்துக்கொண்ட காலம் மிக சொற்பமான ஆண்டுகளே! இந்த விறுவிறு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது 'நிறுவன ஊழியர்களுக்கு முதல் மரியாதை' என்கிற கருத்து.



உலக அளவில் வேறு சில நிறுவனங்களும் இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஸ்டார்பக்ஸ் (உலக மெங்கும் காபி கடைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் நிறுவனம் இது) போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள்.



இந்த புரட்சிகரமான கருத்துக்குக் காரணம், 'நமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் களை நன்கு கவனித்துக் கொண்டால், நிச்சயமாக அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்; அதனால் தொழில் செழிக்கும்' என்கிற ஒரு மனோரீதியான கொள்கைதான்.



இந்த கொள்கையை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் முக்கிய மாகத் தேவைப்படுவது, நாம் என்ன (What) செய்யவிருக்கிறோம்? அதை எப்படிச் (How) செய்யவிருக்கிறோம் என்பதுதான்.



இதற்கு நான்கு நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்

புத்தகத்தின் ஆசிரியர் வினித்.



1 மிரர் - மிரர் (நம்மை நாமே கண்ணா டியில் பார்த்துக் கொள்ளும்போது நம் வெளித்தோற்றத்தில் ஏதாவது தவறிருப்பின் அதைச் சரிசெய்து கொள்ளுகிற மாதிரி, ஒரு நிறுவனத் தில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்ய இது போன்ற ஒரு சுய அலசல் தேவை!)



2நிறுவனத்தில் மாற்றம் கொண்டுவரும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் தைரியம் ஒரு சிலரிடம்தான் இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டு மெனில் ஊழியர்களிடையே நம்பிக்கையையும் நிறுவனத்தின் குறிக்கோள்களையும் அதை அடையக்கூடிய வழிமுறைகளையும் எந்த ஒளிவு மறைவுமின்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.



3 பிரமிட் போன்று இருக்கிற நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுமானத்தைத் தலைகீழாக ஆக்க வேண்டும். நிறுவனத்தில் காலங்காலமாக இருந்து வரும் 'பல அடுக்கு'களை (Hierarchy) உடைத்து, 'வேல்யூ ஜோன்' (Value Zone) என்கிற ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இங்குதான் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். அதற்குத் தலைமை நிர்வாகம் தனது முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும். (இந்த வேல்யூ ஜோனில் உள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது வழக்கமாக இருந்துவரும் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது!)



4 சி.இ.ஓ.வின் ரோலை முற்றிலு மாக மாற்றியமைப்பது. அதாவது, எல்லாவற்றுக்கும் பதிலளிப்பதற்குப் பதிலாக கேள்வி கேட்க வேண்டும். தான் ஒருவர்தான் மாற்றத்திற்கான சூத்ரதாரி என்கிற நினைப்பை சி.இ.ஓ. மறக்க வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேல்யூ ஜோனிற்கு அருகில் உள்ள அடுத்த தலைமுறையைத் தயார்படுத்த வேண்டும்.



மேற்கூறிய நான்கு நிலைகளையும் திறம்பட செயல்முறைப்படுத்தியதன் விளைவு:



2005லிருந்து 2009 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஹெச்.சி.எல்.டி.க்கு கிடைக்கப் பெற்ற 70 சதவிகித 'டீல்'களை இந்திய ஐ.டி. துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் நான்கு பெரிய குழுமங்களுடன் போட்டியிட்டு வென்றது.



நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஐந்து மடங்காகப் பெருகியது.



வேலையை விட்டுச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகக் குறைந்தது.



'ஊழியர்கள் திருப்திகரமாக இருக்கிறார்களா?' என்று கண்டறிய தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 70 சதவிகிதம் அதிகரித்திருந்தது.



புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்கூட வெற்றிகரமான ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்திச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இது ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

1 comments:

butterfly Surya said...

Thanx for sharing..

Post a Comment

Pages