புத்தக விமர்சனம் -Maruti's story

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்

1983, டிசம்பர் 14, சஞ்சய் காந்தியின் பிறந்தநாளன்றுதான் மாருதியின் முதல் 800 சிசி கார் வெள்ளோட்டம் விடப்பட்டது. அந்த விழாவில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, ''இந்த சிறிய காருக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது'' என்று நா தழுதழுக்க தனது மகன் சஞ்சய்காந்தியின் கனவையும் ஆசையையும் நினைவு கூர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரையான மாருதியின் கதைதான் 'தி மாருதி ஸ்டோரி' என்கிற பெயரில் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. 'மாருதி சுஸ¨கி இந்தியா லிட்'டின் தற்போதைய சேர்மன் ஆர்.சி. பார்கவா, சுமார் 20 ஆண்டுகள் மாருதியில் பல வகைப் பொறுப்புகளிலிருந்து இன்று அதன் சேர்மனாக உயர்ந்திருப்பவர். இவரும் பிரபல பத்திரிகையாளர் சீதாவும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் மூலம் நூலாசிரியர்கள் மாருதியின் 27 ஆண்டு சரித்திரத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாளன்றுக்கு 100 கார்கள் (ஆண்டுக்கு சுமாராக 36,500 கார்கள்) மட்டுமே உற்பத்தித்திறன் கொண்டிருந்த மாருதி, இப்போது ஆண்டுக்கு 10 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறது. அரசு நிறுவனமாக ஆரம்பித்த 'மாருதி உத்யோக்' இன்று 'மாருதி சுஸ¨கி'யாக மாறி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நிரூபித்திருக்கிறது.
என்னதான் அரசு நிறுவனமாக இருந்தாலும், அனுமதிகள் என்பது பறித்த பழமாக தானாக வந்து விடவில்லை. இதன் சேர்மன்களும், மேலாண்மை இயக்குநர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் திறம்பட முடிக்க நிறையவே கஷ்டப் பட்டதை புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சுஸ¨கி நிறுவனத்தின் பிரசிடென்ட்டாக இருந்த ஓசாமு சுஸ¨கி மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப் பிலிருந்தவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் கார் புக் செய்தவர்களுக்கு எப்படி அது டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா? ஹரியானாவின் குர்கானில் உள்ள மாருதி தொழிற் சாலையிலிருந்து மாருதி டீலர் எங்கிருக்கிறாரோ, அதுவரை கார் ஓட்டிச் செல்லப்பட்டது. இதனால் கார் புக் செய்தவர் களுக்கு இன்றைக்கு ஷோ ரூமிலிருந்து கிடைப்பது போல புத்தம் புதிய கார் அன்று கிடைக்கவில்லை. காரணம், அன்றைக்கு கார்களை கொண்டு செல்லும் அளவிற்கு ரயில் பெட்டியோ, டிரெய்லரோ இல்லை. இந்த நேரத்தில், அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த கே.ரங்கசாமி என்கிற ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர் இந்தியா திரும்ப தீர்மானித்தார். இந்தியாவுக்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாருதி காரைக் கொண்டு செல்லத் தேவையான டிரெய்லரை வடிவமைத்துக் கொடுக்க மாருதியுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் வடிவமைத்த டிரெய்லரில்தான் 1984 முதல் மாருதி கார்கள் கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு ரயில்வே வேகன்களில் கார்களைக் கொண்டு செல்லும் படி மாற்றி அமைக்கப்பட்டது. இப்படி பல சுவையான விஷயங்கள் இப்புத்தகத்தில் பொதிந்து இருக்கின்றன.
அன்றைக்கு ஆண்டுக்கு லட்சம் கார்கள் தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் தயாரிப்பது சாதாரண விஷயமாகி விட்டது என்பதை தன் அனுபவங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் பார்கவா. ஜப்பானியர்களின் தொழில் நேர்த்தியையும், கலாசாரத்தையும் மாருதி நிறுவனத்தில் அறிமுகப்படுத்த அன்றைக்குத் தலைமைப் பொறுப்பிலி ருந்தவர்கள் பட்ட கஷ்டங்களும் இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
மாருதி ஆரம்பிக்கும்போது இந்தியாவில் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்று மட்டும்தான். அதாவது, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (அம்பாசிடர்), பிரிமீயர் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ். ஆனால் இன்றைக்கு 26 கார் நிறுவனங் களும், 125 மாடல்களும், 400 விதமான (Varients) கார்களும் இந்தியாவில் விற்பனையாகிறது. அது போல ஒரு லட்ச ரூபாய் 'நானோ'விலிருந்து பல கோடி பெறுமான 'மேபாக்' (Maybach) வரையிலும் கிடைக்கிறது.
உலகத்தின் முக்கியச் சாலைகளில் ஓடும் அனைத்துக் கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு இருக்கின்றன.
ஆனால் இன்றைக்கும் இந்திய கார் சந்தையில் முதலிடம் மாருதிக் குத்தான். (கார் சந்தையில் இதன் பங்கு கிட்டத்தட்ட 55%). ஒரு மாடலில் ஆரம்பித்த மாருதி, இன்றைக்கு 13 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆரம்பித் ததிலிருந்து இதுவரை கிட்டத் தட்ட 87 லட்சம் கார்கள் தயாரித்து விற்பனை செய்திருக்கிறது.
இந்நிறுவனம்தான் முதன் முதலில் 40% வெளிநாட்டு மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1991-ன் தாராளப் பொருளாதாரக் கொள்கையின் முன்னோடி மாருதி!
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இந்நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பாராளுமன்றத்தில் பல முறை கேள்வி கேட்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாயிருக்கிறது. ஆளுங்கட்சி எம்.பி.யின் உறவினருக்கு கான்ட்ராக்ட் தரவில்லை என்பதற்காக பழிவாங்கும் நோக்குடன் நூலாசிரியரின் மீது விசாரணை நடத்தப்பட்ட சம்பவங்களும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சுவராஸ்யமான செய்தி: மாருதியின் முதல் காரைப்பெற்ற அதிர்ஷ்டசாலி, திருப்பதி வெங்கடாசலபதிதான்! இந்நிறுவனத்தின் கொள்கைப்படி யாருக்கும் காரை நன்கொடையாகவோ அல்லது இலவசமாகவோ கொடுக்கக்கூடாது. மாருதி ஊழியர்கள் மற்றும் டீலர்கள் சேர்ந்து பணம் போட்டு முதல் காரை வாங்கி அதை ஏழுமலையானுக்குச் சமர்பித்தனர். ஆண்டவனும் மாருதியைக் கைவிடவில்லை. முதல் ஆண்டே ரூபாய் 1.7 கோடி லாபம் ஈட்டித் தந்தார். திட்ட அறிக்கையின்படி 1987, 88-ல்தான் மாருதி ப்ரேக் ஈவனைத் தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் 1984-85லேயே லாபத்தைத் தொட்டுவிட்டது.
'மக்கள் கார்' பற்றிய இந்தப் புத்தகம் மக்கள் பலரைச் சென்றைடையும் புத்தகமாக (விலை மலிவாக) இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

0 comments:

Post a Comment

Pages