புத்தக விமர்சனம் -Alexander the Great's Art of Starategy

Author: Nagaraji.B /

மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி அறியாதவர்கள் அபூர்வம். 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் உலகையே தன் காலடியில் கிடத்தியவன். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அலெக்ஸாண்டரின் வீரத்திலும் விவேகத்திலும் கட்டுண்டவர்களாகதான் இருப்பார்கள். குறிப்பாக ராணுவம், அரசியல் மற்றும் தொழிற்துறைகளில் இருப்பவர்களுக்கு அந்த மாவீரன் ஒரு முக்கியமான ரோல் மாடல்.
அவன் இறந்து (கி.மு. 323) கிட்டத்தட்ட 2400 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் உலகம் அவன் புகழ் பாடக் காரணம் அவனுடைய செயல்திறன்தான். கி.மு. 356-ல் கிரேக்க நாட்டில் பிறந்த அலெக்ஸாண்டருக்கு மெசடோனியாவின் அரசனாக முடிசூட்டப்பட்ட போது 20 வயதே! அடுத்த 13 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்.
இந்நூலாசிரியரான பார்த்தா போஸிற்கு அலெக்ஸாண்டர் பற்றிய அறிமுகம், குவைத்திற்கு அருகிலிருக்கும் ஃபெயில்கா தீவிலுள்ள சிதிலமடைந்த துறைமுக நகரத்தை பெற்றோர்களுடன் தனது ஏழாவது வயதில் பார்வையிடச் சென்றபோது ஏற்பட்டதாகக் கூறுகிறார். அந்த ஈடுபாடும், தாக்கமும்தான் அலெக்ஸாண்டர் பற்றிய தேடலுக்கு வித்திட்டது என்றும் அதன் விளைவுதான் இந்தப் புத்தகம் என்றும் கூறும் இவர் 'டெல்லி மேனேஜ்மென்ட் அசோஸியேஷன்' விருது பெற்றவர்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ அகாதமியில் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றவர் அலெக்ஸாண்டர். அன்றைக்கு அவர் கண்டுபிடித்த, பயன்படுத்திய ராணுவ யுக்திகள் இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அலெக்ஸாண்டரின் தலைமைப் பண்பு மற்றும் ராணுவ செயல்திறனால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் சிலர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜாக் வெல்ஸ் (ஜீ.இ. நிறுவனத்தின் முன்னாள் அதிபர்). அது போல அவனது யுக்திகளில் சிலவற்றை தங்களது தொழில் மேம்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வெற்றி பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனி, டெல், ஜீ.இ, ஹோண்டா, வால்மார்ட் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்நூலின் சிறப்பு என்னவென்றால் அன்றைக்கு அலெக்ஸாண்டரினால் கடைப்பிடிக்கப்பட்ட, அறிமுகப்படுத்தப்பட்ட பல செயல்திறன்கள் எப்படி அவனுக்குப் பிறகு இன்றைக்கு வரைக்கும் தொழில், ராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளுக்கு உதவியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களுடன் தந்திருப்பதுதான். அலெக்ஸாண்டர் அப்படி என்னதான் செய்துவிட்டார்? என்று கேட்கிறவர்களுக்கு இதோ அவருடைய சில செயல்முறைகளும் யுக்திகளும்:


பல தரப்பிலிருந்தும் செய்திகளை சேகரித்து அதன் அடிப்படையில் தனது செயல்திறனையும் தாக்கும் தன்மையையும் வடிவமைப்பது.
எதிரியை வெற்றி கொள்வதுடன் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தைப் படிப்படியாக நிர்மாணிப்பது.
ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தான் எடுத்த முடிவு அல்லது தனது செயல்பாடுகள் குறித்து தனக்குள்ளே தர்க்கம் செய்து கொள்வது. இது நாமே ஒரு தெளிவான முடிவுக்கு வர வழி வகுக்கும்.
கேட்கும் கேள்வியை நன்கு, தெளிவாகக் கேட்பது.இது தலைமைப் பண்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. அனைவருக்கும் அறிமுகமான, தெரிந்த முகத்தை தலைமைப் பதவிக்கு அமர்த்துவது. தனக்குப் பிறகு தலைமைப் பொறுப்பிற்கு யார் வருவார் என்பதை அனைவரும் அறியும்படி செய்வது.
எந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது அல்லது போட்டியிடுவது என்பதைத் தீர்மானிப்பது. உதாரணம். 1959-ல் அமெரிக்காவில் ஹோண்டாவின் 'சூப்பர் கப்' மொபெட் அறிமுகம். இன்றைக்கு வரை, இதன் உலகம் தழுவிய விற்பனை கிட்டத்தட்ட மூன்று கோடி. இன்னும் இது உற்பத்தியில் உள்ளது.
எப்போது சந்தையில் நுழைவது, எப்போது வெளியேறுவது. மழை காலத்தில் உப்பு விற்க கிளம்பாதே என்பார்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் எந்த நேரத்தில் நாம் சந்தையில் நுழைகிறோம் என்பது முக்கியம். அதே போல, ஒரு தொழிலை விட்டு வெளியேற வேண்டுமெனில் சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். கம்பெனியின் பெயர் நல்ல நிலையில் இருக்கும்போது விற்றால் லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடைக்கும் லாபத்தைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெரிய தொழிலை திறம்பட நிர்வகிப்பது. இதற்கு மிகச் சிறந்த தீர்வு, அதை பல சிறிய பிரிவுகளாக ஆக்குவது. குழப்பத்தைத் தவிர்க்க 'ஒரு முகத் தொடர்பு' (single point contact) அமைப்பது.
இப்படி புத்தகம் முழுவதும் யுக்திகளும் யோசனைகளும் செயல் திறன்களும் ஆதாரப்பூர்வமான உதாரணங்களுடன் பரவலாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். இவை எல்லாவற்றையும் அலெக்ஸாண்டர் கடைப்பிடித்தாலும் இறுதியில் தனக்குப் பிறகு யாரிடம் அரசாட்சியை ஒப்படைப்பது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கவில்லை. அதனால் கிரேக்கச் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்தது. அவருக்குக் காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாக இருந்தபோது அவரிடம், 'உங்களுக்குப் பிறகு யார்?' என அவருக்கு நெருங்கியவர்கள் கேட்டபோது அவர், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் 'இருப்பதி லேயே வலிமையானவர்' எனப் பொதுப்படையாகச் சொல்லியதால் அரசை வழி நடத்த ஒரு திறமையான தலைமை அமையவில்லை. தனக்குப் பிறகு யார் என்கிற கேள்வி இன்றைக்கு நமது அரசியல் வட்டாரத்திலும் தொழில் வட்டாரத்திலும் முக்கியமாகக் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.
வாழ்க்கையில் வெற்றிக்கான சூத்திரங்களை வரலா றோடு எடுத்துச் சொன்ன இந்தப் புத்தகம், பிஸினஸ் உலகில் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
கொசுறு: உலகையே தன் காலடியில் விழ வைத்த அலெக்ஸாண்டரை வீழ்த்தியது ஒரு சின்ன விஷயம்தான். அந்த மகா மன்னன் இறந்ததற்குக் காரணம் அற்ப ஜந்துவான கொசுக்கள்தான். ஆம்..அந்த வீரனைச் சாய்த்தது மலேரியா நோய்தானே!
 

0 comments:

Post a Comment

Pages