புத்தக விமர்சனம் -The India Way..

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்
ரு காலத்தில் எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் நம்மை அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம்... இதன் பின்னணியில் அமெரிக்காவின் வார்ட்டன் ஸ்கூலைச் சேர்ந்த நூலாசிரியர்கள் இந்தியாவில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களிடம் பேட்டிக் கண்டு, அவர்களின் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவுகளை புத்தக வடிவில் தந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் 3,000 டாலருக்கு காரும், 300 டாலருக்கு கம்ப்யூட்டரும், 30 டாலருக்கு மொபைல் போனும் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் புதுமைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக் கூடமாக இந்தியா மாறிவருவதுதான். இந்தியாவின் மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றி நூலாசிரியர்கள் குறிப்பிடும்
போது, ''ஆரம்பத்தில் விலை மலிவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதற்குப்பிறகு அத்தொழிலில் இருக்கும் தகுதி, திறமை கருதி அப்படியே இங்கேயே நிலைத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, நமது மென்பொருள் மற்றும் பி.பீ.ஓ. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'இந்தியாவுக்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படும்' என்கிற அறிவிப்பை கேட்டும் அதிகமாக சலித்துக் கொள்ள வில்லை!
1991-க்கு முன்னும், பின்னும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு குறித்து புராக்டர் அண்ட் கேம்பிளின் தலைமைப் பொறுப்பிலிருந்த குருசரண்தாஸ் குறிப்பிடும் போது, ''எனது முப்பது ஆண்டுகால பிஸினஸ் வாழ்க்கையில் நான் சம்பந்தப்பட்டத் தொழிலை அறிந்து கொண்ட ஒரு அதிகாரியைக் கூட நான் சந்தித்ததில்லை. இருப்பினும் எனது தொழிலை நசுக்கும் சக்தி அவர்களிடம் இருந்தது'' என்கிறார். எவ்வளவு அப்பட்டமான உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களான டாடாவும், பிர்லாவும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. 1898-ம் ஆண்டில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட டாடா குழுமத்தின் அப்போதைய தலைவ ரான ஜாம்ஷெட்ஜி டாடா தனது சொத்தில் பாதியை கிட்டத்தட்ட 2 லட்சம் பவுண்ட்டை பெங்களூரில் 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' ஆரம்பிக்கக் கொடுத்தார். இது அமெரிக்காவில் 'கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்' ஆரம்பிக்க ஆண்ட்ரூ கார்னிஜ் கொடுத்த 1 மில்லியன் டாலரை விட அதிகமானதாகும் (அந்த காலகட்ட மதிப்பீட்டின்படி)!. ஆக, இந்திய நிறுவனங்களிடம் தனிநலனிலும் பொதுநலம் மிகுந்திருக்கிறது. தவிர, 'ஜுகாத்' என சொல்லப்படுகிற இருக்கிற வசதி வாய்ப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தும் தன்மையும் இந்தியர்களாகிய நமக்குக் கை வந்த கலை.
இந்தியா வழி நிறுவனங்கள் செயல்படும் விதம் மேல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இவைகளில் முக்கியமானவை...
தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை நிர்வகிக்கும் திறன்.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நிர்வாகத்திறமை.
போட்டியிடும் செயல்திறம்.
நிறுவனத்தை நடத்திச் செல்லும் விதம்.
பொதுநலனில் அக்கறை.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்களை ஒரு பளுவாகவே கருதுகின்றன. மாறாக, இந்திய நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களை ஒரு சொத்தாகக் கருதுகிறார்கள். இன்றைக்கு மென்பொருள்
துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத் திற்கு தாவிச் செல்பவர்கள் அதிகம் (சராசரியாக 17 சதவிகிதம்). அப்படியிருந்தபோதும் அவர்களுக்கு 6 மாதம் முதல் 9 மாதம் வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது. காரணம், பயிற்சி கொடுத்த நிறுவனத்தை விட்டு அவர்கள் வேறு நிறுவனத்திற்குச் சென்றாலும் பலன்
மென்பொருள் துறைக்குத்தான் என்கிற ஒரு பரந்துபட்ட கண்ணோட்டம் அத்துறையை நிர்வகிப்பவர்களிடம் இருப்பதுதான்.
அமெரிக்க நிறுவனங்களின் குறிக்கோள், நிறு வனத்தின் பங்குதாரர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது மட்டும்தான். ஆனால் இந்திய நிறுவனங்கள் பங்குதாரர்களின் நலனுடன் பணிபுரிபவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுவருகின்றன.
இது பற்றி 18 நாடுகளில் 55,000 பேர்கள் வேலை பார்க்கும் ஹெச்.சி.எல்.நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் வினித் நய்யார் தங்களது நிறுவனத்தின் குறிக்கோளாகச் சொல்வது.. 'பணியாளர்கள் முதலில், வாடிக்கை யாளர்கள் பிறகு'. இது சற்று கடினமான ஆனால் மிகவும் தைரியமான ஒரு கொள்கைதான். இதற்கு அவர் கூறும் காரணம், பணியாளர்களை நன்கு கவனித்துக் கொண்டால் அவர்கள் வாடிக்கையாளர்களைக் கண்டிப்பாக நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கைதான்!
இந்தியர்களிடம் உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து செல்லும் தன்மையும், நிர்வாகத்தை வழிநடத்தி செல்லும் திறமையும் நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதற்கு உதாரணம், 2001-ம் ஆண்டு வார்ட்டன் ஸ்கூலின் 120 ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் இல்லாத நிகழ்வாக அதன் பட்டமளிப்பு விழாவில் கிட்டத்தட்ட 1,000 எம்.பி.ஏ. மாணவர்களின் மத்தியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பின் 2007-ல் லட்சுமி மிட்டல் உரை நிகழ்த்தினார். காரணம், அவர்களின் நிர்வாகத்திறனில் அவர்கள் தலைமை வகித்த நிறுவனங்கள் பெற்ற வெற்றிதான்!
இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் பேட்டி கண்ட இந்திய தொழில் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் 100 பேர்கள் பற்றிய குறிப்பும், இந்நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ளவர்களிடம் கேட்ட கேள்விகளும், அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களுக்கிடையேயான வித்தியாசங்களும் மட்டுமே புள்ளி விவரங்களுங்களுடன் கிட்டத்தட்ட 120 பக்கங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்களின் முயற்சியை வெளிப்படுத்தினாலும், படிக்கும் நமக்கு கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது.
இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது நமக்குத் தோன்றுவது, 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..' என்கிற வரிகள்தான். இந்தியாவை உலகம் உற்று நோக்குவதுடன் மட்டுமல்லாமல் பின்பற்றவும் ஆரம்பித்திருக்கிறது என நினைக்கும் போது மனது நிறைகிறது!

0 comments:

Post a Comment

Pages