The Four Conversations

Author: Nagaraji.B /

 23.06.10    தொடர்கள்
ரண்டு கோஷ்டிகள், நீ பெரிசா, நான் பெரிசா என்று பயங்கரமாக முட்டி மோதிக்கொள்கிறார்கள். ஒரே தள்ளு முள்ளு, அடிதடி, இருவருமே கொஞ்சமாவது ரத்தம் பார்க்காமல் விடமாட்டார்கள் என்கிற நிலைமை.
அப்போது, திடீரென்று ஒருவர் உள்ளே நுழைகிறார். நாலு வார்த்தை பேசுகிறார்.இருதரப்பினரும் தலையாட்டிவிட்டுத் தங்கள் வழியில் போகிறார்கள். சுபம்.

சினிமாவில் இதுமாதிரிச் சம்பவங்களை நிறையப் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்திலும் பேச்சுக்கு அப்படி ஒரு மரியாதை உண்டு. சாதாரணக் குழாயடிச் சண்டையில் ஆரம்பித்து, இரு நாடுகளுக்கு இடையிலான போர்கள்வரை எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க முடியும் என்பதற்குச் சரித்திரத்தில் ஏகப்பட்ட சாட்சிகள் உள்ளன.

நாம் அவ்வளவு தூரம் போகவேண்டாம். தினசரி வாழ்க்கையில் வீட்டிலும் வெளியிலும் எத்தனையோ பேரிடம் பேசுகிறோம். அவர்களிடமெல்லாம் எப்படிப் பேசவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டால்,அதன்மூலம் பலவிதமான வேலைகளைச் சுலபமாகச் சாதித்துக்கொள்ளலாம் என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம். ஜெஃப்ரெ ஃபோர்ட், லௌரி ஃபோர்ட் தம்பதியர் எழுதிய அந்தச் சுவாரஸ்யமான நூலின் பெயர்,‘The Four Conversations'.

அதென்ன நான்கு வகைப் பேச்சுகள்?

 1. ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சுகள் (Initiative Conversations)

 2. ‘பரஸ்பரம் புரிஞ்சுக்குவோம்’ பேச்சுகள் (Understanding Conversations)

 3. ‘இப்ப என்ன செய்யணும்?’ பேச்சுகள் (Performance Conversations)

 4. ‘நடந்தது என்ன?’ பேச்சுகள் (Closure Conversations)

எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்குமுன்னால், இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம், அதை எப்படிச் செய்யவேண்டும், யார் எதைச் செய்யவேண்டும்,இதற்குத் தேவையான உதவிகள் எங்கிருந்து கிடைக்கும், எப்படிப்பட்ட பிரச்னைகள் வரக்கூடும், ஏதாவது இடைஞ்சல் என்றால் யாரைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்,இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. இதுதான் ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சுகள்...

உதாரணமாக, ஒரு வீட்டில் இருக்கும் பழைய தொலைக்காட்சியை மாற்றிவிட்டுப் புதியது வாங்கவேண்டும். இதற்காக அந்தக் குடும்பத்தின் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகளையெல்லாம்கூடக் கூப்பிடுகிறார், பிரச்னையைச் சொல்கிறார், ‘இந்தக் காரணங்களுக்காக நான் டி.வி.யை மாற்ற நினைக்கிறேன், அதற்காக இவ்வளவு ரூபாய் செலவழிக்கப்போகிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்கிறார்.

உண்மையில்,அவர் இப்படி யாரிடமும் பேசவேண்டியதே இல்லை. அதிகாரமாக அவரே போய்ப் புது டி.வி. வாங்கிவந்துவிடலாம். அதற்குச் சகல உரிமைகளும் அவருக்கு உண்டு.

ஆனால், நாளைக்கு அந்தத் தொலைக்காட்சியை உபயோகிக்கப்போகும் குடும்பத்தினர், இந்த முடிவு அவர்கள்மேல் திணிக்கப்பட்டுவிட்டதுபோல் உணர்வார்கள்.இது சரியில்லை,அது சரியில்லை என்று குறை சொல்வார்கள்.

அதற்கு வழி வைக்காமல்,அவர் ஒரு ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சு நடத்துகிறார்.மற்றவர்கள் இப்போதைய டி.வி.யில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளைச் சொல்ல,அதன்மூலம் எப்படிப்பட்ட புதுத் தொலைக்-காட்சியை வாங்கவேண்டும் என்று அவர்களே முடிவெடுக்கிறார்கள். இதுதான் ‘பரஸ்பரம் புரிஞ்சுக்குவோம்‘ வகைப் பேச்சு. அதாவது, Understanding Conversations.

அடுத்து, டி.வி. வாங்கவேண்டிய நேரம். இப்போது அவர் மூன்றாவது வகைப் பேச்சுக்குத் தாவுகிறார். தன் மகனைக் கூப்பிடுகிறார். கையில் பணத்தைக் கொடுத்து,‘இங்கே நாம பேசினபடி ஒரு நல்ல டெலிவிஷனாத் தேர்ந்தெடுத்து இந்த வாரத்துக்குள்ள வாங்கிடு’ என்று சொல்கிறார்.

இது, ‘Performance Conversations’ வகையில் வருகிறது. அதாவது, நீ இதைச் செய்யவேண்டும், அதற்கான கட்டுப்பாடுகள் இவை, இத்தனாம் தேதிக்குள் செய்துமுடிக்கவேண்டும்,அது இப்படிப்பட்ட தரத்தில் இருக்கவேண்டும் என்று கறாராகப் பேசுவது, ஒப்புக்கொண்டபடி அந்த வேலைகள் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வது.

கடைசியாக, நான்காவது வகைப் பேச்சு, 'Closure'. அதாவது, நாம் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்துவிட்டோம்,புது டெலிவிஷன் வீட்டுக்கு வந்துவிட்டது. அது நாம் யோசித்தபடி நன்றாக இருக்கிறதா, அல்லது சொதப்புகிறதா? வேலை வெற்றிகரமாக முடிந்தது என்றால், அதைப் பாராட்டி எல்லோரும் ஒரு க்ளாஸ் ஜூஸ் குடித்துக் கொண்டாடலாம், சொதப்பல் என்றால், எங்கே என்ன தப்பு நடந்தது என்று தெரிந்துகொண்டு அடுத்தமுறை இன்னும் கவனமாக இருக்கலாம்.

நீங்களும் நானும் இந்த நான்கு வகைப் பேச்சுக்களைத் தினந்தோறும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால்,அதை நாம் யோசித்துச் செய்வதில்லை.எப்போது எந்த வகைப் பேச்சு சரிப்படும் என்று சிந்திக்காமல் செயல்படும்போதுதான் பிரச்னைகள் பெரிதாகிவிடுகின்றன.

இதேபோல், அலுவலகத்திலும் நாம் சந்திக்கிற எந்தப் பிரச்னைக்கும் இந்த நான்கு வகைப் பேச்சுக்களைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பலன் பெறமுடியும் என்று ஏகப்பட்ட உதாரணங்களுடன் விளக்கிச் சொல்கிறது இந்தப் புத்தகம். நான்கையும் இதே வரிசையில்தான் பேசவேண்டும் என்று அவசியம் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகப்படுத்தினால் உங்களுடைய பேச்சுத்திறன், செயல்திறன் இரண்டுமே கணிசமான அளவு உயரும்,சமூக மதிப்பும் தானாக அதிகரிக்கும்!.

0 comments:

Post a Comment

Pages