எனர்ஜி பஸ்

Author: Nagaraji.B /

ரு பஸ் பயணம் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றும் என்கிறார் ஜான் கார்டன். ‘எனர்ஜி பஸ்’ என்ற பிஸினஸ் நாவலின் ஆசிரியர். இந்த நாவலின் ஹீரோ ஜார்ஜ்.
அவனுடைய வாழ்க்கையில் எல்லாமே பிரச்னைதான். அலுவலகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வீட்டில் குடும்பப் பிரச்னை. இந்தச் சூழலில் ஒரு நாள் பஸ் பயணம் செய்ய வேண்டியதாகிறது.

அந்த பஸ்ஸின் ஓட்டுநர் பெயர், ஜாய். அவள் ஜார்ஜை மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள், ‘ஏன் இப்படி பேய் அறைஞ்சமாதிரி இருக்கீங்க? கொஞ்சம் ஜாலியாச் சிரிச்சு, உற்சாகமா பேசக்கூடாதா?’ என்று உரிமையோடு கண்டிக்கிறாள்.

ஆரம்பத்தில் ஜார்ஜுக்கு ஜாயின் அதிகப்பிரசங்கித்தனம் பிடிக்கவில்லை. ஆனால் போகப்போக,அவளிடம் தன்னுடைய பிரச்னைகளை மனம் திறந்து சொல்கிறான்.

‘இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லைப்பா’ என்கிறாள் ஜாய், ‘நாம இப்ப பயணம் செஞ்சுக்கிட்டிருக்கிறது சாதாரண பஸ் இல்லை, எனர்ஜி பஸ்,இதிலேர்ந்து உன்னோட வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களைத் தெரிஞ்சுக்கமுடியும்!’ என ஒவ்வொன்றாய் சொல்கிறாள். அவள் சொல்லியதிலிருந்து பத்து இதோ:
 உங்களுடைய பஸ்ஸுக்கு, நீங்கள்தான் ஓட்டுநர். அதில் மற்றவர்கள் ஏறிக்கொள்ளலாம். உங்களுக்கு வழிகாட்டலாம். ஆனால் கடைசியில் அதைச் சரியான திசையில்,சரியான வேகத்தில் ஓட்டப்போவது நீங்கள்தான், நீங்கள்மட்டும்தான்!
 நம்முடைய பஸ் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? ரொம்பச் சுலபம், உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று கொஞ்சம் யோசியுங்கள்.அந்தக் கனவுகள்,ஆசைகள், விருப்பங்கள்தான் நீங்கள் போகவேண்டிய பாதையைத் தீர்மானிக்கப்-போகின்றன.
 இந்த பஸ்ஸுக்கு பெட்ரோல், டீசல் என்ன தெரியுமா? ‘எதுவும் நன்றாகவே நடக்கும்‘ என்கிற பாஸிட்டிவ் சிந்தனைகள்தான்
 நீங்கள்மட்டும் பஸ்ஸில் தனியே பயணம் செய்தால் சரிப்படாது.உங்களுடைய குடும்பத்தினரை, நண்பர்களை, கூட வேலை செய்கிறவர்களை ‘ஏற்றிக் கொள்ளுங்கள்.அவர்கள் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்கள். உதவி செய்வார்கள்.
 ‘இந்த பஸ் ஊர் போய்ச் சேராது. மக்கராகிவிடும்’ என்று கிண்டலடிப்பவர்களை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
 உங்களுடைய பஸ்ஸிலேயே பயணத்தைப் பற்றி சந்தேகப்பட்டு புலம்பி உங்கள் உற்சாகத்தைக் கெடுப்பவர்கள் இருந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் இறக்கிவிடுங்கள்.இந்தப் புலம்பல் ஆசாமிகள் எல்லோர் உற்சாகத்தையும் கெடுத்துவிடுவார்கள்.
 பயணம் என்பது, சும்மா ஒரேமாதிரி இருந்தால் போரடிக்கும், மியூசிக், சினிமா என்று உற்சாகப்படுத்துங்கள்.
 உங்களுடைய பயணிகளை உண்மையாக நேசியுங்கள். அவர்கள்மேல் அக்கறை காட்டுங்கள்.சுயநலம் இல்லாமல் அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் உங்கள் வெற்றிக்கு உதவுவார்கள்.
 எந்தப் பயணத்துக்கும் ஓர் உயர்ந்த நோக்கம் இருக்கட்டும். வெறுமனே சுயலாபமாய் மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பயனளிப்பதாய் இருக்கட்டும்.
 நம்முடைய வாழ்நாள் எவ்வளவோ, நமக்குத் தெரியாது. அதை நினைத்து ஒவ்வொரு நாளையும் கசப்பாக்கிக்கொள்ளாதீர்கள்.உங்களுடைய பயணத்தை முழுமையாக ரசித்து அனுபவியுங்கள்

இவைதான் ஜாய் தந்த பத்து யோசனைகள். இந்த பத்து யோசனைகளை தன் வாழ்க்கையில் பயன்படுத்திய ஜார்ஜ் இன்று ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார்.
நீங்கள்?  

0 comments:

Post a Comment

Pages